ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் – ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் முக்கியம்

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் தனித்திறமைகளை அங்கீகரிப்போம்: இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்!

1 மாதங்களுக்கு முன்
ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்  – ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் முக்கியம்

குழந்தைகளில் காணப்படும் நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகளில் ஒன்றான ஆட்டிசம் (Autism), இன்னும் பலரால் தவறாக ‘நோய்’ என கருதப்படுவது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு நோயல்ல, வளர்ச்சி சார்ந்த ஒரு குறைபாடு என்பதையும், சரியான நேரத்தில் கண்டறிந்து பயிற்சிகள் அளித்தால் குழந்தைகள் சாதாரண வாழ்க்கையை நடத்த முடியும் என்பதையும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

பெற்றோருக்கு விழிப்புணர்வு குறைவு

குழந்தைகளின் வளர்ச்சி மைல் கற்கள் (Milestones) குறித்து பெற்றோர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததால், ஆட்டிசம் அடையாளங்களை தாமதமாகவே கவனிக்கிறார்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக, குழந்தை இரண்டு வயது கடந்தும் பேசாமல் இருந்தாலோ அல்லது தொடர்பு கொள்ளாத நிலையிலோ தான் பலர் மருத்துவரை அணுகுகின்றனர்.

ஆரம்ப அறிகுறிகள் என்ன?

ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளதா என்பதை ஆரம்ப கட்டத்திலேயே சில அறிகுறிகளின் மூலம் கவனிக்கலாம். அவையாவது ,பெயரை அழைத்தாலும் பதில் அளிக்காதது, கண் தொடர்பை தவிர்ப்பது, சிரிப்பு, அழுகை போன்ற உணர்ச்சி வெளிப்பாடுகள் குறைவாக இருப்பது, மற்றவர்கள் பேசும் போது அவர்களை நோக்கி பார்க்காதது, கை தட்டுதல், சத்தம் போன்றவற்றுக்கு எதிர்வினை இல்லாமை, விளையாட்டு அல்லது ‘நடிப்பு விளையாட்டு’ (pretend play) இல்லாமை, ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறுவது, தனிமையில் இருக்க விரும்புவது, நண்பர்களை தவிர்ப்பது.

வளர்ச்சி மைல் கற்கள் கவனிக்க வேண்டியது

மருத்துவர்கள் குறிப்பிட்ட முக்கிய வளர்ச்சி அடையாளங்கள்:

12 மாதங்களில் சுட்டிக்காட்டுதல், கையசைத்தல்

16 மாதங்களில் தனிப்பட்ட சொற்கள் பேசுதல்

24 மாதங்களில் இரண்டு சொற்களை இணைத்து பேசுதல்

இந்த திறன்களில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது ஏற்கனவே இருந்த திறன்கள் குறைந்தாலோ உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

சமூக மற்றும் தொடர்பு சிக்கல்கள்

ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்கு சமூக உறவுகள் மற்றும் தொடர்பு திறன்களில் சவால்கள் அதிகம் இருக்கும். அவர்கள் சைகைகள் மூலம் கருத்துகளை தெரிவிப்பதும், புதியவர்களை கவனிக்காததும், குழு விளையாட்டுகளில் ஈடுபடாததும் பொதுவான அம்சங்களாகும்.

மருந்து அல்ல, பயிற்சிதான் தீர்வு

ஆட்டிசத்திற்கு தனிப்பட்ட மருந்து சிகிச்சை இல்லை என நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். ஆனால், கீழ்க்கண்ட சிகிச்சைகள் மூலம் முன்னேற்றம் பெற முடியும்:

பேச்சு சிகிச்சை (Speech Therapy)

தொழில்சார் சிகிச்சை (Occupational Therapy)

பயன்பாட்டு நடத்தை பகுப்பாய்வு (ABA Therapy)

உடல் சிகிச்சை (Physiotherapy)

இந்த பயிற்சிகளை தொடர்ந்து அளித்தால், குழந்தைகள் சமூகத்தில் சாதாரணமாக செயல்படக்கூடியவர்களாக வளர வாய்ப்பு உள்ளது.

அன்பும் ஆதரவும் மிக முக்கியம்

ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்கு குடும்பத்தின் அன்பும் ஆதரவும் மிக முக்கியமானது. அவர்களை மாற்ற முயல்வதை விட, அவர்களின் உலகத்தை புரிந்து கொண்டு அவர்களுடன் இணைவதே சிறந்த அணுகுமுறை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆட்டிசம் ஒரு குறைபாடு மட்டுமே, அது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுசெல்லும் நோயல்ல. சரியான விழிப்புணர்வு, ஆரம்ப கண்டறிதல் மற்றும் தொடர்ந்து வழங்கப்படும் பயிற்சிகள் மூலம், இந்த குழந்தைகளும் முழுமையான வாழ்க்கையை வாழ முடியும் என்பது மருத்துவர்களின் உறுதியான கருத்தாகும்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...