காதலர் தினம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜாக்களும், இதய வடிவிலான சிவப்பு பலூன்களும்தான். ஆனால், இந்தச் சிவப்பு நிறம் எப்படி காதலின் உலகளாவிய குறியீடாக மாறியது என்பதற்குப் பின்னால் நீண்ட கால வரலாறும் ஆழமான உளவியல் காரணங்களும் உள்ளன. பழங்கால எகிப்தியர்கள் சிவப்பு நிறத்தை உயிர்சக்தி மற்றும் வளர்ச்சியின் அடையாளமாகக் கருதினர்.
அதேபோல், ரோமானியர்கள் தங்களின் காதல் தேவதையான வீனஸுடன் இந்த நிறத்தைத் தொடர்புபடுத்தினர். காலப்போக்கில், ஐரோப்பிய நாடுகளில் சிவப்பு ரோஜாக்கள் காதலின் உன்னதப் பரிசாக மாறின. கவிஞர்களும் தங்களின் கவிதைகளில் காதல் வசப்படும்போது முகம் சிவப்பதையும், இதயத் துடிப்பு அதிகரிப்பதையும் சிவப்போடு ஒப்பிட்டு எழுதத் தொடங்கியதே இந்த நிறம் காதலின் மொழியாக மாறக் காரணமாக அமைந்தது.
உணர்ச்சிகளைத் தூண்டும் சிவப்பின் உளவியல் மற்றும் கலாச்சாரத் தாக்கம்
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், சிவப்பு நிறம் மனிதனின் இதயத் துடிப்பை அதிகரித்து உடனடி கவனத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. சிவப்பு நிற உடை அணிபவர்கள் அதிக தன்னம்பிக்கையுடனும், ஈர்ப்புடையவர்களாகவும் மற்றவர்களின் கண்களுக்குத் தெரிவதாக உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இந்தத் தனித்துவமான ஈர்ப்பே காதலர் தினப் பரிசுகளிலும் அலங்காரங்களிலும் சிவப்பை முன்னிலைப்படுத்தியது. 18-ம் நூற்றாண்டுகளில் வாழ்த்து அட்டைகள் அறிமுகமானபோது, அதில் இடம்பெற்ற சிவப்பு இதயங்கள் அன்பு மற்றும் உண்மைத்தன்மையின் அடையாளமாக மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்தன.
பல்வேறு கலாச்சாரங்களில் சிவப்பிற்கு அளிக்கப்படும் உயரிய மதிப்பீடு
உலக அளவில் பல நாடுகளில் சிவப்பு நிறம் மங்கலமான நிறமாகக் கருதப்படுகிறது. சீனாவில் இந்த நிறம் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் குறிப்பதாக நம்பப்படுவதால், அங்கு திருமணங்களில் சிவப்பிற்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. அதேபோல், இந்திய கலாச்சாரத்திலும் மணப்பெண்ணின் சிவப்பு நிறப் புடவை நல்வாழ்வு மற்றும் மங்கலத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய கலாச்சாரப் பின்னணிகளும், நவீனக் காதலர் தினக் கொண்டாட்டங்களும் ஒன்றிணைந்து, சிவப்பை எல்லைகள் கடந்த காதலின் நிரந்தர அடையாளமாக மாற்றியுள்ளன.