கோடை விடுமுறைக்கு சிறந்த தேர்வு: சுற்றுலாப் பயணிகளை கவரும் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள்

நவீன பரப்பரப்பான வாழ்க்கையின் மன இழுத்தம், சுற்றுப்புற வெப்பம் மற்றும் மாசுபாட்டிலிருந்து விடுபட்டு உடல் மற்றும் மன நலத்திற்கும் மலைப்பகுதி சுற்றுலாக்கள் சிறந்ததாக கருதப்படுகின்றன.

1 மாதங்களுக்கு முன்
கோடை விடுமுறைக்கு சிறந்த தேர்வு: சுற்றுலாப்  பயணிகளை கவரும் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள்

கோடை விடுமுறை தொடங்கியவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுற்றுலா செல்லும் ஆர்வம் அதிகரிக்கிறது. குறிப்பாக வெப்பத்திலிருந்து தப்பித்து குளிர்ச்சியான சூழலை அனுபவிக்க மலைப்பகுதிகளே அதிகம் விரும்பப்படுகின்றன. குறைந்த செலவில் அமைதியான, இயற்கை எழில் நிறைந்த இடத்தை தேர்ந்தெடுத்து, சுற்றுலா செல்ல அனைவரும் விரும்புவர். அவ்வகையில் தமிழ்நாட்டில் கோடை சுற்றுலாவிற்கு ஏற்ற பல மலைப்பகுதிகள் உள்ளன.

ஊட்டி

தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் முதன்மையாக விளங்குவது ஊட்டி. நீலகிரி மலைத் தொடரில் சுமார் 2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் “மலைகளின் ராணி” என அழைக்கப்படுகிறது. உயரமான மலைகள், அடர்ந்த காடுகள், பசுமையான புல்வெளிகள் மற்றும் பள்ளத்தாக்குகள் இங்கு இயற்கை அழகை மேலும் அதிகரிக்கின்றன. ஊட்டி ஏரி, தொட்டபெட்டா சிகரம், பைக்காரா நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா போன்ற இடங்கள் சுற்றுலா பயணிகளை கவர்கின்றன.

கொடைக்கானல்

அதேபோல் கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் கொண்ட இந்த பகுதியில் கொடைக்கானல் ஏரி, கொக்கர்ஸ் வாக், பிரையான் பூங்கா, குணா குகை போன்ற பல இடங்கள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

ஏற்காடு

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, “ஏழைகளின் ஊட்டி” என அழைக்கப்படுகிறது. சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ள இந்த இடம் காபி தோட்டங்களால் சூழப்பட்டு, குளிர்ச்சியான வானிலை கொண்டுள்ளது. ஏற்காடு ஏரி, கிளியூர் நீர்வீழ்ச்சி போன்றவை முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

ஏலகிரி

வேலூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஏலகிரி குறுகிய பயணங்களுக்கு ஏற்ற மலைப்பகுதியாகும். இங்கு புங்கனூர் ஏரி, சாகச விளையாட்டுகள், நடைபயணம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்கின்றன.

கொல்லிமலை

கொல்லிமலை இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த இடமாக விளங்குகிறது. 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச் சாலை, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி போன்ற இடங்கள் பயணிகளுக்கு சாகச அனுபவத்தை வழங்குகின்றன.

நீலகிரி

நீலகிரி மலைத் தொடரில் அமைந்துள்ள கோத்தகிரி தேயிலை தோட்டங்களால் சூழப்பட்ட அமைதியான மலை நகரமாகும். இயற்கை அழகும் குளிர்ச்சியான காலநிலையும் இதனை கோடை விடுமுறைக்கு ஏற்ற இடமாக மாற்றுகின்றன.

மேகமலை

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை பசுமை மற்றும் அடர்ந்த காடுகளால் பிரபலமானது. மேகங்கள் மலைகளைத் தொட்டு செல்லும் அழகான காட்சிகள், தேயிலை தோட்டங்கள், அமைதியான சூழல் ஆகியவை இங்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன.

குறைந்த செலவில் இயற்கை அழகை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள் சிறந்த தேர்வாக உள்ளன. கோடை வெப்பத்திலிருந்து தப்பித்து சுகமான மற்றும் அமைதியான விடுமுறையை கழிக்க இந்த இடங்கள் சுற்றுலா பயணிகளின் முதல் விருப்பமாகத் திகழ்கின்றன.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...