முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே இருந்த குறட்டைப் பிரச்சினை, இன்று மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தத்தால் இளைஞர்களிடமும் அதிகரித்துள்ளது. ஆழமான தூக்கத்தின் போது தொண்டை தசைகள் தளர்வடைந்து சுவாசப் பாதை சுருங்குவதால் ஏற்படும் அதிர்வே குறட்டைச் சத்தமாக மாறுகிறது. இது வெறும் சத்தம் மட்டுமல்ல, இதயம் தொடர்பான பாதிப்புகள் மற்றும் மனச்சோர்வுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
சுவாசப் பாதையைச் சீராக்கும் எளிய மசாஜ்
குறட்டையைக் குறைக்க ஒரு சிறந்த வழி கடுகு எண்ணெய் மசாஜ் ஆகும். உறங்கச் செல்வதற்கு முன் சிறிதளவு கடுகு எண்ணெயைச் சூடாக்கி, மூக்கின் வெளிப்புறத்திலும், தாடையின் கீழும் ஐந்து நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தொண்டை அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கும்.
தொண்டை வீக்கம் குறைக்க வாய் கொப்பளித்தல்
தொண்டையில் ஏற்படும் உட்புற வீக்கமும் குறட்டைக்கு முக்கியக் காரணமாகிறது. இதனைச் சரிசெய்ய, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து வாய் கொப்பளிக்கலாம். இது தொண்டை தசைகளை ஆசுவாசப்படுத்தி, குறட்டைச் சத்தத்தைக் கணிசமாகக் குறைக்க உதவும்.
சுவாசத்தை மென்மையாக்கும் தேன் மற்றும் மிளகு
மற்றொரு எளிய மருந்தாக, ஒரு ஸ்பூன் சுத்தமான தேனுடன் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியைக் கலந்து படுக்கைக்கு முன் சாப்பிடலாம். இந்த கலவை சுவாசப் பாதையில் உள்ள சளியை அகற்றி, மூச்சு விடுவதை எளிதாக்கும். இத்தகைய எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மற்றவர்களின் உறக்கத்தைக் கெடுக்காத நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.
