மனித உடலின் வளர்ச்சி, பழுது பார்ப்பு மற்றும் முழுமையான செயல்பாடுகளுக்குப் புரதம் (Protein) மிகவும் அவசியமான ஊட்டச்சத்து என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். தசைகள், எலும்புகள், முடி, நகங்கள் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு புரதம் அடிப்படை அம்சமாகும்.
பொதுவாக, ஒரு ஆரோக்கியமான நபருக்கு அவரது உடல் எடைக்கு ஒவ்வொரு கிலோவிற்கும் தினமும் 1 கிராம் முதல் 1.5 கிராம் வரை புரதம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், குறிப்பாக ஜிம் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தசை வளர்ச்சிக்காக 1.5 முதல் 2 கிராம் வரை புரதம் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதிகப்படியான புரதம் தேவையாகும்.
தசை வளர்ச்சி மற்றும் வலிமை
புரதம் தசைகளின் கட்டுமானக் கூறாக இருப்பதால், தசை வளர்ச்சியையும் வலிமையையும் மேம்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது மிகவும் அவசியமானதாகும்.
காயம் ஆறுதல்
உடலில் ஏற்பட்ட காயங்கள் விரைவாக குணமடைய புரதம் உதவுகிறது. திசுக்கள் மற்றும் செல்களின் பழுது பார்ப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
செரிமானத்திற்கு உதவி
நமது உடலில் உள்ள பல நொதிகள் (Enzymes) புரதங்களால் உருவாக்கப்படுகின்றன. அவை உணவு செரிமானத்தை சீராக நடத்த உதவுகின்றன.
முடி மற்றும் நக ஆரோக்கியம்
முடி உதிர்வு குறையவும், நகங்கள் பலமாகவும் இருக்க புரதம் அவசியமாகிறது. மேலும் புரதம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
புரதம் கிடைக்கும் உணவுகள்
புரதத்தை உணவில் சேர்க்க இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள், பருப்பு வகைகள் (பயறு, கடலை), சோயா, டோஃபு, பன்னீர், விதைகள் மற்றும் பருப்புகள், தானியங்கள் (அரிசி, கோதுமை, சோளம்) ஆகியவற்றை அன்றாட உணவு முறைகளில் பயன்படுத்தலாம்.
எச்சரிக்கை அவசியம்
புரதம் உடலுக்கு அவசியமானதாய் இருந்தாலும், அளவுக்கு மீறி எடுத்துக்கொள்வது உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே புரதத்தை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உடலின் தேவைக்கேற்ப சரியான அளவில் புரதம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்விற்கான முக்கிய அடித்தளமாகும். சமநிலையான உணவுமுறை மற்றும் மருத்துவ ஆலோசனையுடன் புரத உணவுகளை சேர்ப்பது நல்ல பலன்களை அளிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
