நமது நாட்டில் பரவலாகக் காணப்படும் முருங்கை மரம், உணவு மற்றும் மருத்துவம் என இரண்டிலும் தனிச்சிறப்பு வாய்ந்தது. முருங்கைக்காய் மற்றும் கீரையின் பயன்களை அறிந்த அளவுக்கு, அதன் பூக்களில் உள்ள மகத்துவத்தை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. முருங்கை பூவில் வைட்டமின் A, B1, B2, B3 மற்றும் C ஆகிய உயிர்ச்சத்துக்கள் செறிந்துள்ளன. அத்துடன் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற அத்தியாவசியத் தாதுக்களும், புரதச்சத்தும் இதில் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான முழுமையான ஊட்டச்சத்தை இது வழங்குகிறது.
உடல் சூட்டைத் தணிக்கும் இயற்கை மருந்து
முருங்கை பூவை பசும்பாலில் இட்டுக் காய்ச்சி அருந்துவது உடல் சூட்டைத் தணிக்கச் சிறந்த வழியாகும். குறிப்பாகக் கோடை காலங்களில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தைச் சமநிலைப்படுத்த இது ஒரு இயற்கை குளிர்பானமாகச் செயல்படுகிறது.
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உற்ற துணை
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலப் பிரச்சினைகளுக்கு முருங்கை பூ ஒரு சிறந்த தீர்வாகும். இதன் பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயத்தை அருந்துவதன் மூலம், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலி குறையும் என மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
நினைவாற்றலையும் கண்பார்வையையும் கூட்டும்
குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க முருங்கை பூவை அரைத்துப் பாலில் கலந்து, பனங்கற்கண்டு சேர்த்துத் தினமும் கொடுத்து வரலாம். இது தேர்வு காலங்களில் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், நிழலில் உலர்த்திப் பொடி செய்யப்பட்ட முருங்கை பூவைத் தேனுடன் கலந்து சாப்பிடுவதால் கண் பார்வைத் திறன் மேம்படுவதுடன், கண்களில் ஏற்படும் வெண்படலம் உள்ளிட்ட நோய்களும் குணமாகும்.
மன அழுத்தம் மற்றும் நரம்பு மண்டலப் பாதுகாப்பு
இன்றைய பணிச்சுமை நிறைந்த சூழலில் மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு முருங்கை பூ கஷாயம் ஒரு சிறந்த நிவாரணி. இது நரம்புத் தளர்ச்சியைச் சரிசெய்து, நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துவதுடன் மன அமைதியையும் தருகிறது.
சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு
முருங்கை பூவை உணவில் சேர்த்துக் கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். மேலும், முருங்கை பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் (Tea), உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கவசம்
முருங்கை பூவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் தன்மைகள் (Anti-bacterial properties) உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுகின்றன. சளி, இருமல் மற்றும் தொண்டை தொற்று போன்ற பாதிப்புகளைக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது. முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியுமே மருத்துவக் குணம் கொண்டது என்பதால், முருங்கை பூவின் நன்மைகளை உணர்ந்து மக்கள் அதைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
