கீரைகள் நமது அன்றாட உணவில் மிக முக்கியமான இடத்தைப் பெற வேண்டியவை. இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, விட்டமின் A, C, K போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. குறிப்பாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், முதியவர்களுக்கும் கீரை மிகவும் அவசியமான உணவாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் நலத்தை மேம்படுத்தும் சக்தி கீரைகளுக்கு உண்டு. மேலும் சிறுவர்களுக்கு நன்கு மசித்து அல்லது சூப் வடிவில் கொடுத்தால் சுலபமாக ஜீரணமாகும்.
கீரையின் ஊட்டச்சத்து நன்மைகள்
கீரைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. மேலும் கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. விட்டமின் K மற்றும் கால்சியம் எலும்புகளை பலப்படுத்துகிறது. விட்டமின் A கண் பார்வையை மேம்படுத்துகிறது. நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது. பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியம்
கீரைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ‘ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ தாக்கத்தை குறைக்கின்றன. இதனால் நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. மேலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
எடை குறைப்பு மற்றும் செரிமான நன்மைகள்
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கீரை மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும், குறைந்த கலோரி கொண்டதால் எடை குறைக்கவும், எடை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.
கண் ஆரோக்கியத்திற்கு கீரை முக்கியம்
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. கீரையில் உள்ள கரோட்டின்கள் உடலில் வைட்டமின் A ஆக மாறி கண் பார்வையை பாதுகாக்க உதவுகின்றன.
குழந்தைகளுக்கான கீரை – எப்படி கொடுக்க வேண்டும்?
வளரும் குழந்தைகளுக்கு கீரை மிகவும் முக்கியமானது. ஆனால் அதை நன்கு சமைத்து மசித்து அல்லது வடிகட்டி கொடுக்க வேண்டும். இதனால் உள்ள நார்ச்சத்து சுலபமாக ஜீரணமாகி உடல் சத்துக்களை எளிதாக உறிஞ்சிக் கொள்ளும்.
சமைக்கும் முறையில் கவனம் அவசியம்
கீரையை நீண்ட நேரம் அதிக வெப்பத்தில் சமைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அதிலுள்ள முக்கிய சத்துக்கள், குறிப்பாக கரோட்டின் (Vitamin A முன்னோடி) குறைந்து விடும். குறைந்த நேரம் வேகவைத்தல் அல்லது ஆவியில் வேகவைத்தல் சிறந்தது.
சிலருக்கு எச்சரிக்கை: அளவுக்கு மீறினால் பாதிப்பு
கீரையில் உள்ள ஆக்ஸலேட் என்ற பொருள், கால்சியம் உறிஞ்சப்படுவதை பாதிக்கக்கூடும். இதனால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் குறைவான அளவில் மட்டுமே கீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கீரைகளில் காணப்படும் காய்ட்ரோஜென்கள் தைராய்டு செயல்பாட்டை பாதிக்கக்கூடும். எனவே, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே கீரையை உணவில் சேர்க்க வேண்டும்.
கீரை ஒரு ‘சூப்பர் உணவு’ எனக் கருதப்படுகிறது. சரியான அளவில், சரியான முறையில் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். ஆனால், உடல்நிலைப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன், சரியான அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம். தினசரி உணவில் கீரையைச் சேர்த்தால் முழுமையான ஆரோக்கியத்தை பெற முடியும்.
