அடுக்குமாடி வீடுகளிலும் ஆரோக்கியம் மலரும்: மன அமைதி, சுத்தமான காற்று தரும் ‘இண்டோர் பிளான்ட்ஸ்’ முக்கியத்துவம் அதிகரிப்பு

இண்டோர் தாவரங்கள் காற்றில் உள்ள மாசுகளை உறிஞ்சி, சுத்தமான ஆக்சிஜனை வழங்கும் திறன் கொண்டவை

1 மாதங்களுக்கு முன்
அடுக்குமாடி வீடுகளிலும் ஆரோக்கியம் மலரும்: மன அமைதி, சுத்தமான காற்று தரும் ‘இண்டோர் பிளான்ட்ஸ்’ முக்கியத்துவம் அதிகரிப்பு

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அடுக்குமாடி குடியிருப்புகள், சிறிய வீடுகள் என இடவசதி குறைந்த சூழலில் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். வேகமாக நகரும் வாழ்க்கையில் உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் பேணுவது சவாலாக மாறியுள்ள நிலையில், வீட்டின் உள் சூழலை மேம்படுத்தும் ‘இண்டோர் பிளான்ட்ஸ்’ (Indoor Plants) மீது மக்கள் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

வீட்டின் சுற்றுப்புறம் மட்டுமின்றி, வீட்டிற்குள் இருக்கும் பொருட்களும் நமது மனநிலைக்கும் உடல்நலத்திற்கும் நேரடி தாக்கம் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ள இக்காலத்தில், வீட்டிற்குள் கூட நச்சுத்தன்மை கொண்ட காற்று இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. இதனை சமாளிக்க, குறைந்த பராமரிப்பில் வளர்க்கக்கூடிய உள்ளரங்க தாவரங்கள் சிறந்த தீர்வாக பார்க்கப்படுகின்றன.

காற்றை சுத்தப்படுத்தும் இயற்கை தீர்வு

இண்டோர் தாவரங்கள் காற்றில் உள்ள மாசுகளை உறிஞ்சி, சுத்தமான ஆக்சிஜனை வழங்கும் திறன் கொண்டவை. தூசி துகள்களை குறைப்பதோடு, வீட்டின் ஈரப்பதத்தையும் சமநிலைப்படுத்துகின்றன. இதன் மூலம் சுவாச பிரச்சனைகள் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.

மனஅழுத்தம் குறைக்கும் பசுமை சூழல்

பசுமையான தாவரங்கள் மன அழுத்தத்தை குறைத்து, கவனக்குறைவையும் பதட்டத்தையும் கட்டுப்படுத்த உதவுகின்றன. வீட்டில் தாவரங்களை வளர்ப்பது மனநிம்மதியை அதிகரித்து, வாழ்வில் நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது.

வீட்டில் வளர்க்க ஏற்ற முக்கிய தாவரங்கள்

பீஸ் லில்லி

அழகான வெள்ளை மலர்களும் பச்சை இலைகளும் கொண்ட இந்தத் தாவரம் குறைந்த ஒளியிலும் வளரும். மன அமைதியை அதிகரிக்க உதவும். ஆனால் இலைகளில் லேசான நச்சுத்தன்மை இருப்பதால் குழந்தைகளிடமிருந்து விலக்கி வைப்பது நல்லது.

ஸ்னேக் பிளாண்ட்

பாம்பு செடி எனப்படும் இது குறைந்த நீர், எந்த ஒளி நிலையிலும் வளரும் திறன் கொண்டது. இரவில் கூட ஆக்சிஜன் வெளியிடுவதால் படுக்கையறைகளுக்கு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

ஸ்பைடர் பிளாண்ட்

வளைந்த இலைகளுடன் அழகாக வளரும் இந்தச் செடி காற்றை சுத்தப்படுத்துவதில் திறன் வாய்ந்தது. முதல் முறை செடி வளர்ப்பவர்களுக்கு ஏற்றது. குறைத்த பராமரிப்பே போதுமானது.

மணி பிளாண்ட்

வீட்டில் நேர்மறை ஆற்றல், செல்வம், அதிர்ஷ்டம் தரும் தாவரமாக கருதப்படுகிறது. மண்ணிலும் தண்ணீரிலும் எளிதாக வளரக்கூடியது.

கற்றாழை ( அலோ வீரா)

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்தச் செடி சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த பராமரிப்பில் வளரக்கூடியது.

கற்பூரவள்ளி

சளி, சுவாச கோளாறுகள் போன்றவற்றுக்கு இயற்கை மருந்தாக பயன்படும் இந்த மூலிகை தாவரம் வீட்டில் வைத்திருக்க ஏற்றது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எளிய மாற்றம்

நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபட்டு வரும் இன்றைய சூழலில், நமது வீடு தான் நமக்கு பாதுகாப்பான இடமாக மாற வேண்டும். அதற்கு வீட்டின் உள் வளர்க்கும் தாவரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறைந்த இடத்திலும், குறைந்த பராமரிப்பிலும் வளரக்கூடிய இந்தத் தாவரங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் வழங்குகின்றன. அழகும் ஆரோக்கியமும் ஒன்றாக வேண்டும் என்றால், உங்கள் வீட்டில் இன்று ஒரு ‘பசுமை மாற்றம்’ தொடங்குங்கள்!

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...