நவீன வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உடல் உழைப்புக் குறைவு காரணமாகப் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு இயற்கையான தீர்வாக மூலிகை டீகள் (Herbal Teas) முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இன்றைய சூழலில் தேநீர் அருந்துவது பலரின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. சாதாரண தேநீருக்கு மாற்றாக மூலிகை தேநீரைப் பயன்படுத்துவதன் மூலம் உடல்நலத்தை மேம்படுத்த முடியும் என ஆரோக்கிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மூலிகை டீகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும், செரிமானத்தைச் சீராக்கவும் உதவுகின்றன. மேலும் இவை உடலுக்குப் புத்துணர்ச்சி அளித்து நச்சுக்களை வெளியேற்றவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் பெரிதும் துணைபுரிகின்றன.
முக்கிய மூலிகை தேநீர்களும் அதன் பயன்களும்:
இஞ்சி டீ: செரிமானத்தை மேம்படுத்தி, குமட்டல் மற்றும் சளிப் பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கிருமிநாசினி பண்புகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தித் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
துளசி டீ: மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி, ஆயுர்வேதத்தில் முக்கிய இடம் பெறுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
செம்பருத்தி டீ: உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைப்பதுடன், தேவையற்ற கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
புதினா டீ: செரிமானத்தைச் சீராக்கி வயிற்றுப் உபாதைகளைக் குறைக்கிறது. கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு இது மிகவும் நல்லது. வாய் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன், சுவாசத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும், இதில் உள்ள ஆண்ட்ரோஜன் எதிர்ப்பு பண்புகள், பிசிஓஎஸ் (PCOS) பிரச்சினையுள்ள பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையை ஒழுங்குபடுத்தி மாதவிடாய் சுழற்சியைச் சீராக்க உதவுகின்றன. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி முகப்பருக்களைக் குறைக்கவும் இது உதவுகிறது.
லெமன் டீ: உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிப்பது அதிகப் பலன் தரும்.
கிரீன் டீ: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி கொழுப்பை எரிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது.
வாழ்க்கை முறை மாற்றம்:
மூலிகை தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாகத் தேன் அல்லது பனங்கற்கண்டு பயன்படுத்துவது சிறந்தது. தினசரி உணவில் இத்தகைய தேநீர்களைச் சேர்ப்பதுடன், சீரான உணவு முறை மற்றும் முறையான உடற்பயிற்சியையும் கடைப்பிடிப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும். மொத்தத்தில், மூலிகை டீகள் இயற்கையான முறையில் உடல்நலத்தை மேம்படுத்தும் சிறந்த மாற்றுப் பானமாகத் திகழ்கின்றன.
