நவீன உணவுப் பழக்கங்களால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகள் அதிகரித்து வரும் நிலையில், நமது பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் மீண்டும் உலகளவில் உணரப்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் வறுமையின் அடையாளமாகக் கருதப்பட்ட ‘பழைய சோறு’, இன்று ஊட்டச்சத்து நிபுணர்களால் மிகச்சிறந்த 'சூப்பர் ஃபுட்' என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீண்டும் இயற்கை உணவுகளை நோக்கித் திரும்பும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது.
தயாரிக்கும் முறை மற்றும் குணம்
இரவில் மீதமுள்ள சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மண் பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் மோர் சேர்த்து அருந்துவதே பழைய சோறு கஞ்சி ஆகும். இது வெறும் உணவல்ல, உடலுக்குக் குளிர்ச்சி தரும் ஒரு இயற்கை மருந்தாகும்.
கோடைகால தாகத்திற்குத் தீர்வு
வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை (Dehydration) சமநிலைப்படுத்த பழைய சோறு கஞ்சி பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள இயற்கை நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உடலின் ஈரப்பதத்தைப் பராமரித்து, வெயிலால் ஏற்படும் தலைச்சுற்றல் மற்றும் சோர்வைத் தடுக்கின்றன. குறிப்பாக வெயிலில் வேலை செய்வோருக்கு இது உடனடி புத்துணர்ச்சியை வழங்குகிறது.
கொட்டிக்கிடக்கும் ஊட்டச்சத்துக்கள்
பழைய சோறு கஞ்சியில் புரோபயாட்டிக்ஸ் (நன்மை செய்யும் பாக்டீரியா), நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின் B6, B12 ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் விட்டமின் K போன்ற முக்கியத் தாதுக்களும் இதில் அடங்கியுள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையை அடியோடு குறைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
குடல் நோய்களுக்கு அருமருந்து
நவீன உணவுகளில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் குறைவாக இருப்பதே பல செரிமானப் பிரச்சனைகளுக்குக் காரணமாகும். பழைய சோறு உட்கொள்வதன் மூலம் இன்ஃப்ளமேட்டரி பவுல் டிஸ்ஆர்டர் (IBD), அல்சரேட்டிவ் கோலிடிஸ் மற்றும் க்ரோன்ஸ் நோய் போன்ற தீவிர குடல் நோய்களுக்குத் தீர்வு கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்
குறைந்த செலவில் கிடைக்கும் இந்த உணவு, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதிலுள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், ரத்தத்தில் இன்சுலின் அளவைச் சீராகப் பராமரிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாரம்பரியம் மற்றும் நவீன அறிவியல் இணைந்து பழைய சோற்றின் மகத்துவத்தை மீண்டும் உறுதி செய்துள்ளன.
