மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ளது. அதில் கேழ்வரகு (ராகி) முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
சத்துகள் நிறைந்த தானியமாகக் கருதப்படும் ராகி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் பிறந்து ஆறு மாதங்கள் கடந்த பின், அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ராகி உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
கோடைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த பானம்
கோடை வெப்பத்தை சமாளிக்க மக்கள் இயற்கை உணவுகளைக் கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர். அதில் ராகி கூழ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் இந்த கூழ், வெப்பத்தால் ஏற்படும் சோர்வு மற்றும் நீரிழப்பை குறைக்கிறது. மோர், வெங்காயம் போன்றவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், உடல் மேலும் சுறுசுறுப்பாக இருக்கும்.
ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்
ராகியில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெற உதவுகிறது. குறிப்பாக வளர்ச்சி நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும். மேலும், இதில் உள்ள நார்சத்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துவதால் எடை குறைக்க விரும்புவோருக்கும் உதவுகிறது.
ராகியில் உள்ள ட்ரிப்டோஃபேன் அமிலம் பசி உணர்வை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையை சமநிலைப்படுத்த உதவுகிறது. லைசின் போன்ற அமினோ அமிலங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சுருக்கங்கள் மற்றும் அரிப்புகளைத் தடுக்கின்றன. அதேசமயம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முதுமையை தாமதப்படுத்தும் தன்மை கொண்டவை.
முடி மற்றும் சருமத்திற்கு பலன்
புரதச்சத்து அதிகமாக உள்ளதால், ராகி முடி வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், முடி உதிர்வையும் குறைக்க உதவுகிறது. இதனால் இயற்கை அழகை பாதுகாக்கும் உணவாகவும் இது கருதப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கும் உதவி
ராகியில் உள்ள பாலிபீனால்கள் மற்றும் நார்சத்துகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்
ராகியில் உள்ள நார்சத்து மற்றும் பயோ-பைட்டோநியூட்ரியன்கள் செரிமானத்தை எளிதாக்கி, குடல்நலத்தை மேம்படுத்துகின்றன. மேலும், சில ஆய்வுகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் திறனும் இதற்கு இருப்பதாக கூறுகின்றன.
மிதமான அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம்
எல்லா சத்துகளும் நிறைந்த உணவாக இருந்தாலும், ராகி கூழை வாரம் 2–3 முறை அல்லது மிதமான அளவில் எடுத்துக் கொள்வது சிறந்தது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பாரம்பரியமும் ஆரோக்கியமும் இணைந்த உணவாக ராகி மீண்டும் மக்களின் அன்றாட உணவில் இடம்பிடித்திருப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு திரும்பும் ஒரு நல்ல மாற்றமாக பார்க்கப்படுகிறது.
