சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக மேற்கொள்ளக்கூடிய நடைப்பயிற்சி, ஒட்டுமொத்த உடல்நலத்தையும் மேம்படுத்தும் திறன் கொண்டதாகும். தினசரி நடை பழக்கத்தை உருவாக்குவதன் மூலம் பல்வேறு உடல் மற்றும் மன நல நன்மைகளை பெறலாம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதய நலனை மேம்படுத்தும் நடை
வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதய தசைகளை வலுப்படுத்தி, இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. உடலில் தேங்கும் தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்கும் பணியையும் நடை பயிற்சி செய்கிறது.
எடை குறைப்பில் முக்கிய பங்கு
தினமும் ஒரு மணி நேரம் வேகமாக நடப்பதன் மூலம் சுமார் 300 முதல் 400 கலோரி வரை எரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஆய்வுகள் கூறுவதன்படி, தினமும் சுமார் 10,000 அடிகள் நடப்பவர்கள் எடை இழப்பில் அதிக வெற்றி பெறுகின்றனர். மேலும், உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, கொழுப்பு சேமிப்பை தடுக்கிறது.
மனநலத்திற்கும் ஆதரவு
நடைப்பயிற்சியின் போது உடலில் ‘எண்டார்ஃபின்ஸ்’ எனப்படும் ஹார்மோன்கள் சுரப்பது அதிகரிக்கிறது. இது மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை குறைத்து மனநலத்தை மேம்படுத்த உதவுகிறது. தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இயற்கை சூழலில் நடை
டிரெட்மில்லில் நடப்பதை விட பூங்கா, கடற்கரை போன்ற இயற்கை சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்த பலனை தருகிறது. மேலும் இயற்கை வெளிச்சம் உடலுக்கு கிடைப்பதால் வைட்டமின் D உற்பத்தி அதிகரிக்கிறது.
நோய் அபாயம் குறைவு
தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் வேகமாக நடப்பது கூட, இளமையிலேயே ஏற்படும் மரண அபாயத்தை குறைக்க உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, காயங்களிலிருந்து மீள்வதற்கான வேகமும் உயர்கிறது.
நடை பயிற்சி என்பது செலவில்லாத, எளிய மற்றும் சகலருக்கும் ஏற்ற உடற்பயிற்சி. அதை தினசரி வாழ்க்கையில் இணைத்துக்கொள்வதன் மூலம் உடல் மற்றும் மன நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எளிதில் அடைய முடியும்.
