தினமும் இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் தோலை நீக்கி நான்கு முதல் ஐந்து பாதாம் பருப்புகளை சாப்பிடுவது உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, விட்டமின் ஈ, மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ள பாதாம், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
ஊற வைத்த பாதாம் ஏன் சிறந்தது?
பாதாமை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும், நீரில் ஊறவைத்து சாப்பிடுவது எளிதில் செரிமானமாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அதன் வெளிப்புற தோலை நீக்கி சாப்பிடும்போது, செரிமானத்திற்கு தடையாக இருக்கும் சில தன்மைகள் குறைகின்றன. இதனால் உடலில் சத்துக்கள் எளிதாக உறிஞ்சப்படுகின்றன.
ஊற வைத்த பாதாமில் இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுவதால், உடலை செல்கள் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கும் திறன் உள்ளது. மேலும் விட்டமின் பி மற்றும் போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்பு தன்மையையும் வழங்குகின்றன.
செரிமானத்தை மேம்படுத்தும்
நார்ச்சத்து அதிகம் உள்ள பாதாம், குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது, அன்றைய உணவுகளை எளிதில் செரிக்க உதவுகிறது. வாயு, வீக்கம் போன்ற பிரச்சனைகளையும் இது குறைக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும்
பாதாம் பருப்பு இரத்த சர்க்கரை அளவை திடீரென உயர்த்தாது. எனவே நீரிழிவு நோயாளிகள் அளவோடு பாதாமை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஊற வைத்த பாதாம் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுவதாக கூறப்படுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
பாதாமில் உள்ள மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகின்றன. மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்.டி.எல் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் எச்.டி.எல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.
எடை கட்டுப்பாட்டிற்கு துணை
ஊற வைத்த பாதாமில் உள்ள நல்ல கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் தேவையற்ற இடைவேளை உணவுகளைத் தவிர்க்க முடிகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டும் தன்மையும் இதில் இருப்பதால், உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
மூளை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும்
விட்டமின் ஈ மற்றும் பிற மூளை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பாதாம், நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. சிறுவயதிலிருந்தே பாதாமை உணவில் சேர்த்துக்கொள்வது மூளை வளர்ச்சிக்கு நல்லது என கூறப்படுகிறது.
சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம்
பாதாமில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. சரும சுருக்கங்களை குறைத்து, பொலிவை அதிகரிக்கிறது. மேலும் தலைமுடி வலிமையாக வளரவும் துணைபுரிகிறது.
எலும்பு மற்றும் தசை வலிமை
கால்சியம், புரதம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் அதிக உடல் உழைப்பு செய்பவர்களுக்கு பாதாம் நல்ல ஆற்றல் உணவாக கருதப்படுகிறது. இது எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
ரத்த சோகை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு உதவி
இரும்புச்சத்து நிறைந்துள்ள பாதாம், ரத்த சோகையை குறைக்க உதவுகிறது. மேலும் சுவாசக் கோளாறுகள், இருமல், சருமப் பிரச்சனைகள், மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல்நல குறைபாடுகளுக்கும் பாதாம் பயன்படுகிறது என கூறப்படுகிறது.
மருத்துவர்களின் ஆலோசனை என்ன?
தினமும் 4 முதல் 5 பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, காலையில் தோலை நீக்கி சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் பாதாம் ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது
