“ஓடி விளையாடு பாப்பா” எனக் கூறிய கவிஞர் பாரதியாரின் அறிவுறுத்தல்கள் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியை வலியுறுத்தினாலும், தற்போது மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சியின் பயன்பாடு அதிகரித்ததால் குழந்தைகள் வீட்டுக்குள் மட்டுமே அடங்கி வாழும் நிலை உருவாகியுள்ளது.
உடல் மற்றும் மன வளர்ச்சி
இத்தகைய வாழ்க்கை முறை குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. வெளியில் ஓடி விளையாடும் வாய்ப்புகள் குறைவதால், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், கண் பார்வை குறைபாடு, விட்டமின் D குறைபாடு போன்ற சுகாதார பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. சிறு வயதிலேயே கண்ணாடி அணிவது போன்ற பிரச்சினைகளும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சமூக திறன்
தனியாக மொபைல் அல்லது டிவியில் நேரத்தை செலவிடும் குழந்தைகள், சமூக உறவுகள், பகிர்வு மனப்பான்மை, குழுவாக செயல்படும் திறன் போன்ற அடிப்படை மனித குணங்களை இழக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் அவர்கள் மனஅழுத்தம், கோபம், தனிமை உணர்வு போன்ற மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாகின்றனர்.
பெற்றோரின் பங்கு
அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ள இக்காலத்தில், குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்கள் குறைந்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் அருகிலுள்ள பூங்காக்கள் மற்றும் திறந்த வெளி இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து சென்று விளையாட வைப்பது மிகவும் அவசியமானதாகிறது. வெளிப்புற விளையாட்டுகள் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, அவர்களின் ஆளுமை திறன் மற்றும் சமூக பழகும் திறனையும் மேம்படுத்துகின்றன.
பேட்மிட்டன், கோ-கோ, பாண்டி, ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் குழு உணர்வை வளர்க்கின்றன. இவ்விளையாட்டுகள் மூலம் குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு, விட்டுக் கொடுத்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள். இது அவர்களை எதிர்காலத்தில் சமுதாயத்தில் நல்ல முறையில் வாழ உதவுகிறது.
நிபுணர்கள் கருத்து
நிபுணர்கள் கூறுகையில், வெளிப்புற விளையாட்டுகள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் அடிப்படை அம்சமாகும். குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்காக தினமும் குறைந்தபட்சம் சில மணி நேரங்கள் வெளியில் விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மொபைல் மற்றும் டிவி பயன்பாட்டை கட்டுப்படுத்தி, வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல், தெளிவான மனம் மற்றும் நல்ல சமூக பண்புகளுடன் கூடிய புதிய தலைமுறையை உருவாக்க முடியும்.
