அதிநவீன தொழில்நுட்பமும் இயந்திரத் தனமான ஓட்டமும் நிறைந்த உலகில் மனித உறவுகளுக்கு இடையே ஒரு மெல்லிய இடைவேளை விழுந்துள்ளது. இந்தப் பரபரப்பு நிறைந்த உலகில், பாசத்தை தேடி பல உயிர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனாக இருந்தாலும் சரி மிருகமாக இருந்தாலும் சரி தன் அன்பை வெளிப்படுத்தவும் பாசத்தை கொட்டி தீர்க்கவும் மற்றொரு உயிர்களை நம்பியே உள்ளது. மனிதர்களால் புறக்கணிக்கப்படும் சிலர், வாயில்லா உயிர்களை தனது உற்ற தோழமைகளாக ஆக்கிக் கொள்கின்றனர். அதேபோல் விலங்குகளும் மனிதனின் அன்புக்கு அடிமையாகி தான் போகிறது. அன்பு என்ற ஒற்றை காரணத்தினால் மட்டும்தான் இந்த பூமி இதுவரை சலிக்காமல் சுழன்று கொண்டிருக்கிறது. சரியான அன்பு கிடைக்கவில்லை என்றால் மாற்று வழியை மனிதர்கள் தேடுவது போல, தனிமைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று தனது மொத்த பாசத்தையும் ஒரு பொம்மை மீது பொழிந்து வருகிறது.
தாயால் கைவிடப்பட்ட 'பஞ்ச்'
ஜப்பானின் இச்சிகாவா மிருகக்காட்சிசாலையில், பிறந்த உடன் தன் தாயால் கைவிடப்பட்ட ஏழு மாத குட்டி குரங்கு தான் 'பஞ்ச்'. தாயின் அரவணைப்பிற்கு ஏங்கும் அந்த குரங்கிற்கு ஒரு குரங்கு பொம்மை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த பொம்மையை தன் உலகமாக எண்ணி தன்னுடைய வாழ்நாட்களை கழித்து வருகிறது. அந்த பொம்மையை தன்னுடைய பாதுகாப்பாக 'பஞ்ச்' கருதி வருகிறது. இந்நிலையில் பஞ்ச் மற்ற குரங்குடன் இயல்பாக பழகுவதற்கு முயற்சித்த நிலையில், எல்லா குரங்குகளும் ஒன்று கூடி பஞ்சை சாரமாறியாக தாக்கியது. இதனால் பயந்து அங்கும் இங்கும் ஓடிய பஞ்ச், ஒரு கட்டத்தில் பொம்மையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடிக்க தொடங்கியது. இந்த வீடியோ இணையதளத்தில் பெரும் பேசு பொருளானது. அன்புக்காக ஏங்கும் பஞ்ச் மீது பலருக்கும் இரக்கம் வர தொடங்கியுள்ளது. இந்த பஞ்ச் குரங்கை காண்பதற்காகவே தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த மிருக காட்சி சாலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்தும் இந்த குரங்கை காண்பதற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
பஞ்ச் சொல்லும் பாடம் என்ன?
நம்மில் பலரும் பொம்மையுடன் ஒரு பிணைப்பு ஏற்படுத்தி வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். பரந்த விரிந்த உலகில் ஆதரவுக்கு ஏங்கி நிற்கும் ஒரு உயிருக்கு, தான் எதிர்பார்த்த அன்பு கிடைக்காத போது உயிரற்ற பொருள் மீது அவர்கள் உயிர் வைக்கத் தொடங்குவதை காண முடிகிறது. வெறும் பஞ்சு அடைக்கப்பட்ட பொம்மையாக தெரியாமல் ஒரு உயிருள்ள உறவாக அந்த பொம்மையை தூக்கிக்கொண்டு அலைபவர்களின் செயலுக்குப் பின்னால் இருப்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு தீராத தன்மையின் தாகம். இந்த பொம்மைகளுக்கு பதிலளிக்கத் தெரியாது, கோபப்பட தெரியாது. ஆனால் உணர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொள்ளும் ஒரு துணையாக இது பார்க்கப்படுகிறது. இயந்திர உலகில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்க தவறும் போது ஒரு பொம்மையிடம் தஞ்சம் புகுவது என்பது, மனித மனம் எப்போதும் ஒரு பிணைப்பை எதிர்பார்க்கிறது என்பதையே காட்டுகிறது. உயிரற்ற பொம்மைகளை மனிதர்களாக பாவித்து அன்பை பொழிவது இன்றைய காலத்தின் முரண். இந்த பொம்மையை சுமந்து செல்லும் பஞ்ச் என்ற குரங்கு சொல்லும் செய்தி ஒன்றுதான். அன்பு செலுத்தவும் அதைப் பெற்றுக் கொள்ளவும் ஒரு உயிர் வேண்டும். தொழில்நுட்பம் நமக்கு வசதிகளை தரலாம் ஆனால் ஒருபோதும் ஒரு மனிதனின் அரவணப்பையோ ஒரு வார்த்தை ஆறுதலையோ தந்துவிட முடியாது. எனவே உறவுகள் அருகில் இருக்கும் போதே அவற்றை கொண்டாடுவோம். இல்லையெனில் நாளை நாமும் பஞ்சை போல உணர்வுளற்ற பொம்மைகளிடமே அன்பை தேட வேண்டி இருக்கும்