காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக இன்று 'சாக்லேட் தினம்' கொண்டாடப்படுகிறது. அன்பின் அடையாளமாக சாக்லேட்டுகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கம். ஆனால், சாதாரண சாக்லேட்டுகளைத் தாண்டி, ஒரு கிலோ பல லட்ச ரூபாய் மதிப்பிலான அரிய வகை சாக்லேட்டுகள் உலகில் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
கலைநயம் மற்றும் அரிய வகை மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட உலகின் டாப் விலையுயர்ந்த சாக்லேட்டுகள் குறித்த ஒரு பார்வை
ஃபேபெல் ட்ரினிட்டி (Fabelle Trinity - Truffles Extraordinaire)
உலகின் மிக விலையுயர்ந்த சாக்லேட் என கின்னஸ் சாதனை படைத்தது இது. இதன் விலை ஒரு கிலோவிற்கு சுமார் ₹4.3 லட்சம். மிச்செலின் ஸ்டார் செஃப் பிலிப் கான்டிசினி என்பவரால் உருவாக்கப்பட்ட இதில், 15 கைவினைத் துண்டுகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை மட்டும் சுமார் ₹1 லட்சம். இதில் சேர்க்கப்படும் அரிய வகை மூலப்பொருட்களே இதன் விலைக்குக் காரணமாகும்.
லா மேடலின் ஓ ட்ரஃபு (La Madeline au Truffe)
டேனிஷ் சாக்லேட்டியர் பிரிட்ஸ் நிப்ஷில்ட் என்பவரால் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட், உலகின் ஆடம்பரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் பிரான்ஸ் நாட்டின் அரிய வகை 'பெரிகார்ட் ட்ரஃபு' (Périgord truffle) சேர்க்கப்படுகிறது. ஒரு சிறிய சாக்லேட் துண்டின் விலை சுமார் ₹20,750 ($250) ஆகும்.
டோ-அக் மாஸ்டர்ஸ் சீரிஸ் (To’ak - Masters Series Enriquestuardo)
எக்குவடோர் நாட்டின் அரிய வகை 'நேஷனல் காகோ' (Nacional cacao) பீன்ஸ்களில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்த வகை காகோ ஒரு காலத்தில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. வெறும் 50 கிராம் எடையுள்ள இந்த சாக்லேட் பாரின் விலை சுமார் ₹40,670 ($490). சில சாக்லேட்டுகள் மது வகைகளைப் போல பல ஆண்டுகள் பீப்பாய்களில் வைத்து முதிர்ச்சியடையச் (Ageing) செய்யப்படுவது இதன் தனிச்சிறப்பு.
டெலஃபி கோல்ட் சாக்லேட் (DeLafée Gold Chocolate Box)
சுவிட்சர்லாந்து நாட்டின் கைவண்ணத்தில் உருவான இதில், உண்ணக்கூடிய 24 கேரட் தங்கத் துகள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எட்டு சாக்லேட்டுகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை சுமார் ₹32,370 ($390). சுவிஸ் சாக்லேட் தரம் மற்றும் தங்கத்தின் மதிப்பு என இரண்டும் சேர்ந்து இதற்கு ஒரு ராஜ தோற்றத்தைத் தருகின்றன.
லீ லிவ்ரே (Le Livre by Debauve & Gallais)
பிரான்ஸ் நாட்டு அரச குடும்பத்திற்குச் சாக்லேட் வழங்கிய பாரம்பரியம் கொண்ட நிறுவனம் இது. தோல் உறையிடப்பட்ட ஒரு புத்தக வடிவிலான பெட்டியில் 35 கைவினைச் சாக்லேட்டுகள் அடுக்கப்பட்டிருக்கும். இதன் விலை சுமார் ₹45,650 ($550). 1800-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் பாரம்பரிய முறையில் இவை தயாரிக்கப்படுகின்றன.
