தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடந்த 2025 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இமாலய சாதனை படைத்தது. வருடத்திற்கு ஒரு படமாவது 100 கோடி கிளப்பில் இணைவதை வழக்கமாகக் கொண்டுள்ள விஜய் சேதுபதிக்கு, இந்த 2026 ஆம் ஆண்டிலும் இரண்டுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியான இவரின் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் அதிரடி டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
கிருத்திகா உதயநிதியுடன் இணையும் புதிய கூட்டணி
சூழல் இவ்வாறு இருக்க, தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாகப் பிரபல இயக்குநரும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. தமிழில் பல படங்களை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், கடந்த 2025 இல் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்திற்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக இருந்த கிருத்திகா, அந்தப் புதிய கதையை விஜய் சேதுபதியிடம் விவரித்ததாகக் கூறப்படுகிறது.
கதைக்கு ஓகே சொன்ன விஜய் சேதுபதி
கிருத்திகா உதயநிதி சொன்ன தனித்துவமான கதை விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்துப் போனதால், இந்த புதிய கூட்டணியில் படம் உருவாவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இணையத்தில் இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவி வரும் நிலையில், இது எந்தளவுக்கு உண்மை என்பது குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே இந்த கூட்டணியின் அதிகாரப்பூர்வ நிலவரம் தெரியவரும்.
கைவசம் இருக்கும் மெகா புராஜெக்ட்டுகள்
விஜய் சேதுபதி தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் ‘பாக்கெட் நாவல்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்திலும் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர மேலும் சில புதிய படங்களிலும் கமிட்டாகியுள்ள விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி படத்திலும் இணைந்தால் அது அவரது திரைப்பயணத்தில் மற்றொரு சுவாரசியமான திருப்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
