நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் நிலவும் சிக்கல்களால் தற்போது தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வில் உள்ளது. இதற்கிடையில், பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திச் சிலரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருவேற்காட்டைச் சேர்ந்த உமாசங்கர் என்பவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
உமாசங்கரின் பங்கு மற்றும் நீதிமன்றத்தின் கடும் கண்டனம்
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்றபோது, உமாசங்கர் தரப்பு வழக்கறிஞர் அவர் ஒரு ஜவுளிக்கடை மேலாளர் என்றும், அவருக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் வாதிட்டார். ஆனால், இதற்குத் தயாரிப்புத் தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்தின் உதவி எடிட்டர் மற்றும் அவரது சகோதரர் திருடி வந்த காட்சிகளை உமாசங்கரே இணையத்தில் பதிவேற்றிப் பகிர்ந்ததாகவும், இவரே இந்தச் சட்டவிரோதச் செயலின் முக்கியக் சூத்திரதாரி என்றும் போலீசார் வாதிட்டனர். இதன் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறிய உமாசங்கரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தினர். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உமாசங்கரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
