திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் ஜோடிகளான விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகா மந்தன்னாவும் இன்று ஒருவழியாகத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாகப் பேசாமல் மௌனம் காத்து வந்த இந்த ஜோடி, ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மணவாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில், இன்று காலை 10 மணி அளவில் இவர்களது திருமணம் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது.
கட்டுக்காவலான பாதுகாப்பு
கடந்த 24-ஆம் தேதியே நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உதய்பூர் சென்றடைந்த இந்த ஜோடிக்கு, அங்கு ஹல்தி மற்றும் மெஹந்தி உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன. குறிப்பாக ஹல்தி வைபவத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கலந்துகொண்டதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஈஷா ரெப்பா, ஆஷிகா ரங்கநாத் போன்ற திரையுலகத் தோழிகளும், இயக்குநர்கள் தருண் பாஸ்கர், ராகுல் ரவீந்திரன் ஆகியோரும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அம்பானி குடும்பத்தினர் உட்பட மிக முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் பங்கேற்றனர்.
நெட்ஃபிளிக்ஸ் கோரிக்கை நிராகரிப்பு
பிரதமர் நரேந்திர மோடியே இந்தத் தம்பதிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், திருமணப் புகைப் படங்களைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருமண நிகழ்வைப் படம்பிடிக்கவோ அல்லது சமூக வலைதளங்களில் பகிரவோ யாருக்கும் அனுமதி வழங்கப்படாததால், புகைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இவர்களது திருமண வீடியோவை ஒளிபரப்ப பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் அணுகியபோது, தங்களது தனிப்பட்ட வாழ்வை வணிகமயமாக்க விருப்பமில்லை எனக் கூறி விஜய் மற்றும் ரஷ்மிகா தரப்பு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டது. விரைவில் மணமக்களே அதிகாரப்பூர்வமாகத் தங்களது திருமணப் புகைப்படங்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
