தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து, தற்போது நம்பிக்கைக்குரிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளவர் நடிகர் சூரி. 'விடுதலை', 'கருடன்' எனத் தொடர்ந்து வெற்றிகளைத் குவித்து வரும் அவர், தற்போது தனது ஏழாவது படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் ரவிக்குமாருடன் கூட்டணி
'இன்று நேற்று நாளை' மற்றும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஆர். ரவிக்குமார், தனது அடுத்தப் படத்தில் சூரியுடன் கைகோர்த்துள்ளார். பிரம்மாண்டமான படைப்புகளைத் தயாரிக்கும் 'மைத்ரீ மூவி மேக்கர்ஸ்' (Mythri Movie Makers) நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் கூடிய முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
மிரட்டும் போஸ்டர்
வெளியாகியுள்ள போஸ்டரில் “Blood followed the flood” (வெள்ளத்தைத் தொடர்ந்து ரத்தம் வந்தது) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது ஒரு ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பைப் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
ஹீரோவாக சூரியின் பயணம்
வெற்றிமாறனின் 'விடுதலை பாகம்-1' மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதைத் தொடர்ந்து 'கருடன்', 'கொட்டுக்காளி', 'விடுதலை 2', 'மாமன்', 'மண்டாட்டி' போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வரிசையில், சூரியின் ஏழாவது படமாக உருவாகும் இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
