விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற 'தாய் கிழவி' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிவகுமார் முருகேசன், தனது அடுத்த புதிய திரைப்படத்தை இயக்கக் களம் இறங்கியுள்ளார். 'சேயோன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தைக் கோலிவுட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் ஆகியோர் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மதுரையில் க்ளாப் அடித்த உலகநாயகன்
இந்தத் திரைப்படத்திற்குத் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கட்டிப்போடும் முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை பாக்ய ஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 'சேயோன்' திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முறைப்படி பூஜையுடன் விமரிசையாகத் தொடங்கியது. தயாரிப்பாளர் கமல்ஹாசன் நேரில் வருகை தந்து, படப்பிடிப்பைத் தொடக்கி வைத்துப் படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தத் தொடக்க விழாவின் போது பிரபல சினிமா விநியோகஸ்தரும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான அன்புசெழியன் உடனிருந்து சிறப்பித்தார்.
