மெகா பவர் ஸ்டார் ராம் சரண், பாலிவுட் நாயகி ஜான்வி கபூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பெத்தி’. 'உப்பன்னா' பட புகழ் இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கியுள்ள இப்படத்திற்கு, முன்னணி ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கேமரா கையாண்டுள்ளார்.
ஐந்து மொழிகளில் ஜூன் 4-ல் பிரம்மாண்ட ரிலீஸ்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா படமாக வருகிற ஜூன் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஈஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், 'பெத்தி' படத்தின் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இரண்டரை ஆண்டுகால கடின உழைப்பு
செய்தியாளர்கள் சந்திப்பில் நாயகன் ராம் சரண் பேசுகையில், "இந்தப் படத்தை முழுமையாக முடித்து திரைக்குக் கொண்டு வர எங்களுக்குச் சுமார் இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டது. அதில் 285 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்பு தளத்தில் ஒட்டுமொத்தக் குழுவும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறோம். எங்களை விடவும் இப்படத்திற்காக அதிக உழைப்பைக் கொட்டியவர் இயக்குநர் புச்சி பாபு சானா மட்டும்தான். நாங்கள் வெளியில் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மையில் ரஹ்மான் சார், சிவ ராஜ்குமார் சார் போன்ற மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த கலைஞர்கள் ஒரு படத்தில் நம்மோடு பயணிக்கும் போது, அந்தப் பயணத்தின் எந்தவொரு கஷ்டமும் நமக்குத் தெரியாது" என்றார்.
அதிகாலை வரை உழைத்த இசைப்புயல்
தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் குறித்துப் பேசிய ராம் சரண், "இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இந்த 'பெத்தி' திரைப்படத்தின் மிக முக்கிய மையத் தூணாக விளங்குகிறார். படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில், கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அவர் தினமும் அதிகாலை வரை தூங்காமல் விழித்திருந்து, படத்தின் பின்னணி இசைப் பணிகளை (BGM) செதுக்கியுள்ளார். இந்த வயதிலும் கலை மீது அவர் காட்டும் அர்ப்பணிப்பு எங்களைப் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களுக்குப் பெரிய உத்வேகத்தைத் தருகிறது" என்று நெகிழ்ந்தார்.
சிவ ராஜ்குமாரின் கண்கள் பேசும் தீப்பொறி
கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிவ ராஜ்குமார் குறித்துப் பகிர்ந்து கொண்ட ராம் சரண், "சிவ ராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே போதும், அங்கு ஒரு தீப்பொறி பறப்பது போன்ற அசுர ஆற்றல் தானாகவே உருவாகிவிடும். அவரது கண்கள் மட்டுமே திரையில் ஆயிரம் வார்த்தைகளைப் பேசும் வல்லமை கொண்டவை. அந்த அளவுக்கு ஒரு வெறியோடு நடித்துள்ளார். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தை நான் வெறும் ஒரு கமர்ஷியல் நடிகராக நின்று செய்யவில்லை; கதையை மனதாரக் காதலித்து, ரசித்துச் செய்திருக்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தனது உரையை நிறைவு செய்தார்.
