தமிழ் திரையுலகில் இயக்குனராக தனித்துவமான கவனம் பெற்ற பிரஷாந்த் பாண்டிராஜ் தற்போது கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் குமார், கீர்த்தி கிருத்தி கர்பந்தா நடித்த ‘ப்ரூஸ்லி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரஷாந்த் பாண்டிராஜ், அதன் பின்னர் விமல், இனியா மற்றும் பாலசரவணன் நடித்த ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்த தொடரின் வெற்றியால் தமிழ் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்ற அவர், தொடர்ந்து சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கினார். அந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இயக்குனராக இருந்து நடிகராக மாறியுள்ள பிரஷாந்த் பாண்டிராஜ், குற்றப்புலனாய்வு விசாரணையை மையமாகக் கொண்ட ‘வாரண்ட்’ இணையத் தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த தொடரில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நமிரதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கௌசல்யா, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி ஆகியோரும் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடரின் கதையும் திரைக்கதையும் பிரஷாந்த் பாண்டிராஜ் எழுதியுள்ள நிலையில், அவருடன் இணைந்து கதை எழுதிய விக்னேஷ் நடராஜன் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்த தொடருக்கு, ஏ.ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இந்த தொடரை பிரஷாந்த் பாண்டிராஜே தயாரித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘வாரண்ட்’ இணையத் தொடர், ZEE5 ஓடிடி தளத்தில் வரும் மே 22ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், ‘வாரண்ட்’ தொடரின் முதல் பார்வை வீடியோவை வெளியிட்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
