தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீதிகா தயாரித்து இயக்கும் புதிய திரைப்படம் ‘டே 11’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
பி.ஆர்.ஜி ஜெகநாதன் பிக்சர்ஸ் பேனரில் தயாராகும் இந்த படத்தில் ஆதர்ஷ் மற்றும் மனோஜ் நாயகர்களாக நடித்துள்ள நிலையில், ஸ்வேதா அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரவிசந்தர் மற்றும் அபிமன்யு தபல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு அனில் இசையமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவை செல்வா கவனித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், படம் நாளை(may-8) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படம் குறித்து இயக்குனர் ஸ்ரீதிகா கூறியதாவது:
“ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் கலந்த பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக ‘டே 11’ உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய கதைக்களத்தை இந்த படத்தில் கூறியுள்ளோம். ஒரு விசித்திரமான விளையாட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் மர்மமான சவால்கள் ஆகியவை படம் முழுவதும் திரில்லான அனுபவத்தை தரும்,” என்றார்.
மேலும், ஒரு பெண் உட்பட ஐந்து நண்பர்கள் கட்டாயமாக ஒரு மர்ம விளையாட்டில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த விளையாட்டின் போது அவர்களுள் ஒருவரான தோழி உயிரிழக்கிறார். ஆனால், அந்த விளையாட்டை முடிக்க அவர் மீண்டும் வர வேண்டும் என்ற சூழல் உருவாகிறது என்பதையே கதையின் மையமாக கொண்டு படம் நகர்கிறது எனவும் தெரிவித்தார்.
இந்த கதை முழுவதும் 11 நாட்களுக்குள் நடைபெறுவதால், படத்திற்கு ‘டே 11’ என தலைப்பு வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஊட்டி, கொடைக்கானல் மற்றும் இமயமலை பகுதிகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கை சூழலுடன் கூடிய திரில்லான காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது
