தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் திரிஷா, தனது திரைப்பயணத்தின் தொடக்கப் புள்ளியான 'மௌனம் பேசியதே' திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இயக்குனர் அமீரின் அறிமுக இயக்கத்தில், சூர்யா - திரிஷா கூட்டணியில் உருவான இத்திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி காதலர் தினச் சிறப்பு வெளியீடாக இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆரம்பத்தில் 'ஜோடி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கதாநாயகியாகத் திரிஷா தடம் பதித்தது இத்திரைப்படத்தின் மூலமே என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்குத் திரிஷாவின் நெகிழ்ச்சியான வேண்டுகோள்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசியுள்ள திரிஷா, தனது முதல் அடியை எடுத்து வைத்த 'மௌனம் பேசியதே' திரைப்படம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அனைவரும் அறிவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் தன்னுடன் நடித்த சூர்யா, லைலா மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று இப்படத்தை மீண்டும் கண்டு மகிழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் கலந்த இத்திரைப்படம் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இணையும் சூர்யா - திரிஷா கூட்டணி
'மௌனம் பேசியதே' திரைப்படத்திற்குப் பிறகு சூர்யா மற்றும் திரிஷா ஜோடி 'ஆறு' திரைப்படத்தில் நடித்திருந்தது. அதன் பிறகு சுமார் 19 ஆண்டுகளாக இந்த வெற்றிக் கூட்டணி இணையாமல் இருந்த நிலையில், தற்போது 'கருப்பு' என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக 'மௌனம் பேசியதே' ரீ-ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
