திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் எஸ். பொதுவால் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு எலம்குளத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக இயக்குனர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்படி பதிவு செய்த பின்னரே போலீசார் இந்த வழக்கை உறுதி செய்துள்ளனர். இயக்குனர் சிதம்பரம் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 74 (பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படுதல்) மற்றும் பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இயக்குனருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஜான் ஏ மன்' (2021) மற்றும் சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'மஞ்சுமெல் பாய்ஸ்' (2024) ஆகியவற்றின் மூலம் புகழ்பெற்ற இயக்குனரான சிதம்பரம், தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த கடுமையான புகார்கள் குறித்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. 2022-இல் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தற்போது புகாராக உருவெடுத்துள்ளது கேரளத் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
