சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம், வெளியீட்டிற்கு முன் ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கல்களால் நேற்று திரையரங்குகளில் வெளியாகாமல் தாமதமான நிலையில், இன்று காலை முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருப்பு. இப்படத்திற்கு சாய் அபியக்கர் இசையமைத்துள்ளார். சூர்யாவுடன் திரிஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘கருப்பு’ திரைப்படம் நேற்று வெளியாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதி மற்றும் பைனான்ஸ் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக படம் வெளியிட முடியாமல் போனது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பு தரப்பும், விநியோகஸ்தர்களும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் படம் இன்று காலை முதல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் நடிகர் சூர்யா தனது பதிவில், “எங்களுடன் துணை நின்ற ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மனமார்ந்த நன்றி. ‘கருப்பு’ இன்று வெளியாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, இன்று காலை கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது.
படம் தாமதமாக வெளியானாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறையாமல் இருப்பதால், இன்று முதல் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
