தளபதி விஜய் தனது திரைப்பயணத்தின் கடைசிப் படமாகத் தேர்ந்தெடுத்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் மாதமும் வெளியாக வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கைக்குழுவின் (Censor Board) கெடுபிடிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு விநியோகஸ்தரின் அதிரடி அறிவிப்பு
இப்படத்தின் கனடா நாட்டு விநியோகஸ்தரான 'யார்க் சினிமாஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், 'ஜனநாயகன்' திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பாக வெளியாக வாய்ப்பில்லை என்றும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதி முடிவான பிறகு முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தணிக்கைக்குழு சிக்கலும் நீதிமன்ற வழக்கும்
ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்குத் தணிக்கைக்குழு கத்தரி போடச் சொன்னதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. இருப்பினும், நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வராததால், வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மறு தணிக்கைக்குழுவிடம் (Re-examining Committee) செல்ல படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த மறு தணிக்கை நடைமுறைகள் முடிவடையக் கூடுதல் காலம் எடுக்கும் என்பதால், படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகிறது.
விஜய்யின் அரசியல் கணக்கும்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். 'ஜனநாயகன்' ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்ற பிம்பம் இருப்பதால், தேர்தல் நேரத்தில் இதனை வெளியிட தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். தேர்தலுக்கு முன்பே படத்தை வெளியிட்டு மகளிர் வாக்குகளைக் கவரலாம் என்று விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போதைய சூழல் அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
