சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆக்ஷன், காமெடி மற்றும் மாஸ் காட்சிகள் நிறைந்த இப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து சுமார் 600 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, மிர்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு மீண்டும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் , ரம்யா கிருஷ்ணன் , மிதுன், சந்தானம் , யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வித்யா பாலன், S. J. சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரும் சிறப்பு தோற்றங்களில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 21ஆம் தேதியுடன் நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஜெயிலர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகும் இந்த பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திரைப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் சுமார் 160 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
