திரையிசை உலகில் அரை நூற்றாண்டு காலத்தை நிறைவு செய்துள்ள இசைஞானி இளையராஜா, தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு அமெரிக்கா மற்றும் கனடாவில் மாபெரும் இசைச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும், 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த சாதனையாளராகவும் திகழும் அவர், வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் நேரடி இசைக் கச்சேரிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற டால்பி தியேட்டர் போன்ற பிரம்மாண்ட அரங்குகளில் இசைஞானியின் இசை ஒலிக்கவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நற்பணிக்கான இசை நிகழ்ச்சி
"மியூசிக் பார் ஹீலிங்" (Music for Healing) என்ற உன்னத நோக்கத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளை சரிகம மற்றும் மெர்குரி நிறுவனங்கள் ஒருங்கிணைக்கின்றன. இந்த இசைப் பயணத்தின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, இசையின் வழியே மனநலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்த்தி உலகை வியக்க வைத்த இளையராஜா, தற்போது வட அமெரிக்க நாடுகளில் தனது இசைப் பயணத்தைத் தொடர ஆயத்தமாகி வருகிறார்.
