நடிகர் சூர்யாவின் பெருந்தன்மையால் தான் கருப்பு படம் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்துள்ளது என அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
ரூ.300 கோடி வசூலை எட்டிய கருப்பு படம்
கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு படம் கடந்த மே 15ம் தேதி வெளியானது. மே 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கி ஒருநாள் தாமதமாக இப்படம் வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இப்படத்தில் த்ரிஷா, நட்டி, ஷிவதா, ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சாய் அபயங்கர் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் ரிலீசான 2 வாரங்களில் ரூ.300 கோடி வசூலை எட்டியுள்ளது.
கருப்பு படம் உருவாக காரணமான திருட்டு
இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படம் உருவான காரணத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, “எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. எல்கேஜி படத்திற்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்வில் என்னிடம் கத்தி முனையில் கொள்ளை நடந்தது. எனது செயின், மொபைல் போன் மற்றும் பர்ஸ் ஆகியவை பறிக்கப்பட்டன. அதை சட்டப்பூர்வமாக நீதிமன்றம் மூலம் மீட்க நான் முயற்சித்தேன். அது நீண்ட காலமாக இழுத்தது. கடைசியில் அந்த வழக்கை நான் கைவிட்டேன்.
அந்த சம்பவம் எனக்கு மிகவும் மன உளைச்சலைத் தந்தது. அந்நேரம் எனக்கு சினிமா பற்றி அதிகம் தெரியாது. ஆனால் நான் எல்கேஜி படத்தை உருவாக்க முயன்றபோது, இந்தச் சம்பவத்தை ஒரு திரைப்படமாக எடுக்க விரும்பினேன். கதை எழுத தொடங்கிய நிலையில் அது யதார்த்தமான மற்றும் ஆழமான மலையாள படம் போன்ற உணர்வை உண்டாக்கியது.
பிறகு, கடவுளே நீதிமன்றத்திற்குச் சென்றால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை எண்ணம் எனக்கு வந்தது. அதன் பிறகு திரைக்கதை பெரிதாகவும், சிறப்பாகவும் மாறியது. ஒரு வலுவான மாஸ் கமர்ஷியல் படமாக வெளியாகியிருக்கிறது. சூர்யாவின் முந்தைய வெளியீடான கங்குவா சரியாக செல்லாததால் கருப்பு மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது உண்மை தான். சூர்யா இப்படத்தில் இணைந்த பிறகு அவருக்காகவும் திரைக்கதையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. கருப்பு படம் மிகுந்த சிரமங்களை சந்தித்த நிலையில் சூர்யாவின் பெருந்தன்மையால் தான் ரிலீசானது என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
