சமீபகாலமாகத் தமிழ் சினிமாவில் இலக்கியப் படைப்புகளைத் திரைப்படமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஜெயமோகன், பூமணி, பெருமாள் முருகன் போன்ற ஆளுமைகளின் கதைகள் திரையில் மாயாஜாலங்களை நிகழ்த்தி வரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் பிரபல கதைசொல்லியும் நடிகருமான பவா செல்லத்துரை இணைந்துள்ளார். அவர் எழுதிய முத்திரை பதித்த கதையான ‘நீர்’, தற்போது திரைப்படமாக உருவெடுக்க உள்ளது. இந்தப் புதிய முயற்சியைத் திரையுலகினர் மற்றும் இலக்கியவாதிகள் பெரும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
‘பராரி’ திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் எழில் பெரியவேடி, இந்தப் புதிய படத்தை இயக்க உள்ளார். கிணறு வெட்டும் தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட இந்த ‘நீர்’ கதையை, சினிமாவிற்கேற்ற சில சுவாரஸ்யமான மாற்றங்களுடன் அவர் செதுக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதை நிலத்தடி நீருக்கான தேடலையும், மனித உணர்வுகளையும் ஆழமாகப் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், தென்னிந்தியத் திரையுலகின் துருப்புச் சீட்டுகளான விஜய் சேதுபதி, மெகா ஸ்டார் மம்மூட்டி மற்றும் முன்னணி இயக்குநர் மிஷ்கின் ஆகியோரை முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
