இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகிகளில் ஒருவரான ஆஷா போஸ்லே (92) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
10 வயதிலேயே இசைப் பயணத்தை தொடங்கிய ஆஷா போஸ்லே, 1943ஆம் ஆண்டு மராத்தி திரைப்படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். பின்னர் பல்வேறு இசை வடிவங்களில்—கஜல், பஜன், பாப் உள்ளிட்ட துறைகளில்—தன் திறமையை வெளிப்படுத்தி இந்திய இசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றார்.
20க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ள அவர், உலகிலேயே அதிக பாடல்கள் பாடியவராக கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார். “மெலோடி குயின்” என ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவர், லதா மங்கேஷ்கர் அவர்களின் தங்கையும் ஆவார்.
இவர் இரண்டு தேசிய விருதுகள், பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தனது 90 வயதைக் கடந்த பின்னரும் இசையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. அவர் தமிழில் பாடிய, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்கள் சில
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி - ஹேராம்
ஓ பட்டர்ஃப்ளை - மீரா
செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்
செப்டம்பர் மாதம் - அலைபாயுதே
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் - சந்திரமுகி
எங்கெங்கே - நேருக்கு நேர்
சாத்து நட சாத்து - சேதுபதி ஐபிஎஸ்
வெண்ணிலா வெண்ணிலா - இருவர்
ஆஷா போஸ்லே மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், “அவரது குரல் இந்திய கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக இருந்து, தலைமுறைகளை கடந்தும் மக்களின் இதயங்களைத் தொட்டது” என்று குறிப்பிட்டார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் கமல்ஹாசன், ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி உள்ளிட்டோர் அவருடைய மறைவை இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக வர்ணித்துள்ளனர்.
ஆஷா போஸ்லேயின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குரலும், இசைப் பயணமும் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.
