தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான பாரதிராஜா இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம்
தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என அழைக்கப்பட்ட பாரதிராஜா தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் 1941 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பிறந்தார். 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய மாற்றங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பலரையும் மண்வாசனைச் சார்ந்த படங்களை எடுக்க வைத்தவர் பாரதிராஜா.
இயக்குநர் டூ நடிகர்
பாரதிராஜா இல்லாத தமிழ் சினிமாவை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினார். ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திரையுளவில் தொடர்ந்து பயணித்து வந்தார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வேதம் புதிது, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே, புது நெல்லு புது நாத்து, கடலோர கவிதைகள், கிழக்கே போகும் ரயில், கண்களால் கைது செய், அன்னக்கொடியும் கொடிவீரனும், என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ள பாரதிராஜா நடிகராகவும் பல்வேறு படங்களில் ஜொலித்துள்ளார். சூர்யா, தனுஷ், விதார்த் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
மனோஜின் மறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா
வயது மூப்பு காரணமாக சினிமா பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்கி வந்தார். இதனிடையே பாரதிராஜா கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அதேசமயம் 2025ம் ஆண்டு அவரின் மகனும் நடிகருமான மனோஜின் மறைவு பாரதிராஜாவை நிலைகுலைய செய்தது. அதிலிருந்து மீள முடியாமல் மனதளவில் தவித்து வந்த பாரதிராஜாவுக்கு உடல்நல பிரச்சனைகளும் பின்னடைவை கொடுத்தது.
இந்நிலையில் தனது 84வது வயதில் பாரதிராஜா உயிரிழந்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலேயே தொடர் சிகிச்சை எடுத்து வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு
பாரதிராஜா 2004ம் ஆண்டு மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதை சினிமாவில் சிறந்த பங்களிப்பிற்காக பெற்றார். அதேசமயம் அவர் இயக்கிய முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, அந்திமந்தாரை, கடல்பூக்கள், தெலுங்கு படமான சீதா கொகா சியூகா ஆகிய படங்கள் தேசிய விருதை வென்றது. இப்படிப்பட்ட பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு என்றும் பேரிழப்பு தான்!
