நடிகர் ஜெயராம் தனது மகனும், நடிகருமான காளிதாஸ் தேசிய விருது பெறும்போது மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுடன் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது காளிதாஸ் அந்திகாட்டின் கொச்சு கொச்சு சந்தோஷங்கள் படத்துக்காக தேசிய விருது பெற்ற புகைப்படம் காட்டி அதன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டது.
அதுபற்றி பேசிய ஜெயராம், “காளிதாஸ் தேசிய விருது வாங்குவதற்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். நாங்கள் எல்லாம் சென்றிருந்தோம். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு அதற்கான ரிகர்சல் நடைபெற்றது. அதாவது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மேடைக்கு எந்த வழியாக ஏறி குடியரசுத் தலைவரிடம் விருதை வாங்கியதும் கைகுலுக்க கூடாது. எப்படி வணக்கம் சொல்ல வேண்டும், எப்படி மேடையில் இருந்து வெளியேற வேண்டும் என்பது சொல்லித் தரப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற காளிதாஸ், அன்றைய நாளில் எங்கிருந்தோ ஒரு நோட்டு, பேனா வாங்கி வந்து உடைக்குள் மறைத்து வைத்திருந்தான். அது எங்களுக்கும் தெரியாது. எதுவுமே செய்யாதது போல மேடை ஏறி விருதையும் பெற்றுவிட்டான்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு பின்னால் ஒருபக்கம் அவரது பாதுகாவலரும், மறுபக்கம் விருது கொண்டு வருபவரும் நின்று கொண்டிருந்தார். அதில் ஒருவரிடம் இந்த விருதை சற்று பிடியுங்கள் என தெரிவித்துவிட்டு உடைக்குள் கைவிட்டு எதையோ காளிதாஸ் தேடிக் கொண்டிருந்தான். அப்துல் கலாமின் பாதுகாவலர்கள் பதறிவிட்டனர். என்ன செய்கிறான் என அனைவரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கும்போது உள்ளே இருந்து ஒரு சிறிய நோட்டை எடுத்து ஆட்டோகிராப் ப்ளீஸ் என அப்துல்கலாமிடம் கேட்டான்.
அதைப் பார்த்து அப்துல் கலாம் சிரித்து விட்டார். உடனடியாக என் மகனிடம் உனது பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு காளிதாஸ் என கூறிய அவன், என்னையும் என் மனைவியையும் கைகாட்டி அதுதான் என்னுடைய பெற்றோர்கள் என தெரிவித்தான்.
கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் அப்துல் கலாம், காளிதாஸ் இடையேயான உரையாடல் நிகழ்ந்தது. அந்த உரையாடலில் நீ என்னவாக விரும்புகிறாய் என அப்துல்கலாம் கேட்க, நான் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என காளிதாஸ் கூறி சமாளித்தான். இப்போதும் அப்துல் கலாம் போட்ட கையெழுத்து வீட்டில் இருக்கிறது. காளிதாஸின் அந்த சாதனை என்னை பெருமைப்பட வைத்தது” என ஜெயராம் தெரிவித்திருப்பார்.
