தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் மீது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி புகார் அளித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியில் சல்மான் கானை வைத்து "சிக்கந்தர்" திரைப்படத்தையும், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் "மதராசி" திரைப்படத்தையும் முருகதாஸ் இயக்கியிருந்தார். எனினும், இந்த இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
"சிக்கந்தர்" படத்தின் தோல்வி குறித்துப் பேசியிருந்த முருகதாஸ், சல்மான் கான் படப்பிடிப்பிற்குச் சரியான நேரத்திற்கு வராதது மற்றும் மொழிப் பிரச்சினையே இதற்குக் காரணம் எனத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, "சிவகார்த்திகேயன் படப்பிடிப்பிற்குச் சரியான நேரத்திற்கு வருபவர் தானே, பின் ஏன் 'மதராசி' படம் தோல்வி அடைந்தது?" எனச் சல்மான் கான், முருகதாஸைச் சாடிப் பேசியிருந்தது ஏற்கனவே பேசுபொருளானது.
இதற்கிடையில், “மதராசி” படத்தின் தயாரிப்பாளர் முருகதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். ஆரம்பத்தில் ரூ.115 கோடி பட்ஜெட்டில் படத்தை முடிப்பதாகக் கூறிவிட்டு, முறையான திட்டமிடல் இல்லாததால் படத்தின் செலவு ரூ.170 கோடியாக உயர்ந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கியதே இந்த நஷ்டத்திற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், தனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, இந்த நஷ்டத்தைச் சரிகட்ட ஏ.ஆர். முருகதாஸ் தனது பிளாக்பஸ்டர் படமான “ரமணா” படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை (Ramana 2) எழுதித் தயாரிப்பாளருக்கு இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இடையிலான இந்தச் சமரசம் கோலிவுட்டில் புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.
