நடிகர் பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங்க் பேங்க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நகைச்சுவை கூட்டணிகளில் ஒன்றாக கருதப்படும் பிரபுதேவா - வடிவேலு ஜோடி, சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ‘காதலன்’, ‘மனதை திருடிவிட்டாய்’, ‘மிஸ்டர் ரோமியோ’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர்களின் காமெடி கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘பேங்க் பேங்க்’ திரைப்படத்தை இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பை நடிகர் மற்றும் இயக்குனரான S. J. சூர்யா வெளியிட்டிருந்தது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
மேலும், நடிகர் பப்லு பிரீத்திவீராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி தயாரிதுள்ளார். மேலும் தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வரும் ‘பேங்க் பேங்க்’ திரைப்படத்தில் ஜாம்பிகள் மற்றும் எரிமலை பின்னணியிலான காட்சிகளும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கமான காமெடி படங்களை விட வித்தியாசமான அனுபவத்தை இந்த படம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
