2009 ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், கல்வி அமைப்பை விமர்சிக்கும் தனித்துவமான கதையால் ரசிகர்களின் மனதில் நிலைத்த படம் ஆகும். இதில் அமீர் கான் , R. மாதவன் மற்றும் சர்மான் ஜோஷி நடித்திருந்தனர்.
இந்த படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, விஜய் , ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், “3 இடியட்ஸ் ” படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அமீர் கான் தெரிவித்துள்ளார். அமர் உஜாலா ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியதாவது, இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி தற்போது இரண்டாவது பாகத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், அந்தக் கதையை தானும் கேட்டதாகவும், அது மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் வாழ்க்கை பாடங்களை இணைக்கும் தன்மை கொண்டதாக இந்தக் கதை இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, முதல் பாகத்தில் இருந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வாறு மாறியுள்ளது என்பதை மையமாகக் கொண்டு கதை நகரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், தற்போது ராஜ்குமார் ஹிராணி தனது அடுத்தடுத்த படைப்புகளில் பிஸியாக உள்ள காரணத்தால், அந்த பணிகள் முடிவடைந்த பின்னரே “3 இடியட்ஸ் 2” படப்பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என கூறப்படுகிறது.
இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
