வாஷிங்டனில் உள்ள ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் வருடாந்திர விருந்து விழாவில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த விழாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஆயுதங்களுடன் வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே நுழைய முயன்றார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி அவரைத் தடுத்தபோது, அந்த நபர் தனது ஷாட்கன் துப்பாக்கியால் அதிகாரியை நோக்கிச் சுட்டார்.
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் விருந்து அரங்கில் இருந்தவர்கள் அச்சத்தில் மேசைகளுக்குக் கீழே தஞ்சமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு அதிபர் ட்ரம்ப் மற்றும் பிற தலைவர்களைப் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக, துப்பாக்கி குண்டு பாய்ந்த பாதுகாப்பு அதிகாரி தனது கவச உடையால் (Bulletproof vest) உயிர் தப்பினார். தாக்குதல் நடத்திய நபர் கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், பாதுகாப்பு அதிகாரிகளின் துரிதமான பணி பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். கடந்த 2024-ம் ஆண்டில் ஏற்கனவே இரண்டு முறை ட்ரம்ப் மீது கொலை முயற்சிகள் நடந்த நிலையில், தற்போது மீண்டும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 1981-ல் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் மீது இதே ஹில்டன் ஹோட்டல் வாசலில் வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்க வரலாற்றுத் தற்செயலாகும்.
