ஈரான் நாட்டுடன் வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், தற்போது அமலில் உள்ள இடைக்கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் சமரச முயற்சியால் கடந்த 8-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால், மேற்காசியாவில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை
அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் வகையில் செயல்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்தது. இருப்பினும், இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதால், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்கா அந்தப் பகுதியை முடக்கக் கூடாது என்றும் ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. இந்நிலையில், வரும் புதன்கிழமைக்குள் பேச்சுவார்த்தை வெற்றி பெற்று ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டால், மீண்டும் குண்டுகளை வீச வேண்டியிருக்கும் என்றும், போர் நிறுத்தத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இருப்பினும், ஈரானுடன் நடைபெற்று வரும் திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் அமெரிக்க அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
