அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 13 வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில் கடந்த 50 ஆண்டுகளாக மரண தண்டனைக்காகக் காத்திருந்த 70 வயது முதியவருக்கு வியாழக்கிழமை நச்சு ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜேம்ஸ் ஹிட்ச்காக் என்ற அந்த நபர், 1976-ஆம் ஆண்டு தனது உறவினரான சிந்தியா டிரிகர்ஸ் என்ற சிறுமியைக் கொலை செய்ததற்காக 1977-ல் தண்டனை பெற்றார். புளோரிடா மாநில சிறையில் வியாழக்கிழமை மாலை 6:12 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3:42 மணி) ஜேம்ஸ் ஹிட்ச்காக்கிற்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டு அமெரிக்க சிறைகளில் நீண்ட காலம் காத்திருந்த கைதிகளில் இவரும் ஒருவர் என்பதும், இறுதிவரை அவர் தன்னை நிரபராதி என்று கூறி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸிலும் தொடர்ந்த மரண தண்டனை
அதே வியாழக்கிழமை அன்று டெக்சாஸ் மாநிலத்திலும் மற்றொரு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2008-ஆம் ஆண்டு இரண்டு இசைத் தயாரிப்பாளர்களைக் கொலை செய்த வழக்கில் 37 வயதான ஜேம்ஸ் பிராட்னாக் என்பவருக்கு மாலை 6:47 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4:17 மணி) நச்சு ஊசி செலுத்தப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அமெரிக்காவில் 10 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நச்சு ஊசி தவிர, துப்பாக்கியால் சுடுதல் மற்றும் நைட்ரஜன் வாயுவை சுவாசிக்கச் செய்தல் போன்ற முறைகளும் தண்டனை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவின் 23 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதனை விரிவுபடுத்தவும், புதிய முறைகளைப் புகுத்தவும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
