அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு வல்லுநர்களுக்கான எச்-1பி (H-1B) விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய விவகாரத்தில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் மிகப்பெரிய சட்டப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. டிரம்ப் அரசு புதிய எச்-1பி விசாக்களுக்கு விதித்திருந்த 100,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 83 லட்சம் ரூபாய்) என்ற மிக பிரம்மாண்டமான கட்டண உயர்வு முற்றிலும் சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் பிரகடனப்படுத்தி, அதனை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பாஸ்டன் நீதிமன்றத்தின் நீதிபதியான லியோ சொரோகின் கடந்த திங்கள்கிழமையன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.
20 மாநிலங்களின் தலைமை வழக்கறிஞர்கள் தொடுத்த சட்டப்போர்
திறமையான வெளிநாட்டு நிபுணர்களை அமெரிக்காவிற்குள் வரவிடாமல் முடக்கும் நோக்கில், கடந்த செப்டம்பர் மாதத்தில் டிரம்ப் இந்த கட்டண உயர்வை அறிவித்திருந்தார். எச்-1பி விசாக்களைப் பெறுவதற்கான செலவை அசுர வேகத்தில் அதிகரித்த டிரம்பின் இந்த முடிவை எதிர்த்து, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 20 மாநிலங்களின் அரசு தலைமை வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ சொரோகின், டிரம்ப் விதித்த 100,000 டாலர் கட்டணமானது விசா கட்டணம் அல்ல, அது ஒரு 'சட்டவிரோத வரி' என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடி அதனை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்தார்.
விண்ணப்பங்களை முடக்கிய கட்டணக் கொள்ளை
டிரம்பின் இந்த சர்வாதிகார அறிவிப்புக்கு முன்னதாக, அமெரிக்க நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக விசா கோரி விண்ணப்பிக்கும் போது, பொதுவாக சுமார் 2,000 டாலர் முதல் 5,000 டாலர் வரையிலான நியாயமான கட்டணங்களை மட்டுமே செலுத்தி வந்தனர். ஆனால், டிரம்ப் அரசு கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்தியதால், திகைத்துப்போன நிறுவனங்கள் எச்-1பி விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதையே முழுமையாகக் குறைத்துக் கொண்டன. இதனை நீதிமன்ற ஆவணங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஓர் அரசு ஆவணத்தில், பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) இந்த புதிய 100,000 டாலர் கட்டணத்தின் கீழ் ஒட்டுமொத்தமாகவே வெறும் 85 விண்ணப்பங்களுக்கான தொகையை மட்டுமே பெற்றிருந்ததாக டிரம்ப் நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியர்களின் அமெரிக்கக் கனவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி
அமெரிக்கக் குடிவரவு அமைப்பில் H-1B விசா என்பது மிக முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. குறிப்பாக, இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நிதித்துறை நிபுணர்கள் அமெரிக்காவில் தங்களது திறமையைக் காட்டிப் பணிபுரிவதற்கான முதன்மை நுழைவாயிலாக இந்த விசா திட்டம் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்படும் ஒட்டுமொத்த எச்-1பி விசாக்களில் சிம்ம சொப்பனமாக விளங்கும் பெரும்பான்மையான பங்குகள் இந்தியக் குடிமக்களுக்கே கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா ஆண்டுதோறும் பொதுப் பிரிவில் 65,000 விசாக்களை வழங்குகிறது. இதுதவிர, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உயர் பட்டங்களைப் பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்களுக்காகக் கூடுதலாக 20,000 விசாக்கள் என மொத்தம் 85,000 விசாக்கள் மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. FWD.us என்ற குடிவரவு ஆதரவுக் குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, தற்சமயம் சுமார் 7,30,000 எச்-1பி விசா வைத்திருப்பவர்களும், அவர்களைச் சார்ந்து வாழும் அவர்களது கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 5,50,000 பேரும் அமெரிக்க மண்ணில் பாதுகாப்பாக வசித்து வருகின்றனர். நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் இந்தியர்களின் அமெரிக்கக் கனவு மீண்டும் பிரகாசமடைந்துள்ளது.
