ஆன்லைன் வாயிலாகச் சிறார்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதைத் தடுக்கும் நோக்கில், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளில் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட தேடுதல் வேட்டை நடைபெற்றது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 17 வரை நான்கு வாரங்கள் நீடித்த இந்த அதிரடி சோதனையில், சிங்கப்பூர் போலீஸாருடன் இணைந்து புருனே, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்லாந்து நாட்டுப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இந்த ஏழு பிராந்தியங்களிலும் மொத்தம் 382 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 326 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் காவல்துறை (SPF) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் கைது நடவடிக்கையும் அதிர்ச்சித் தகவல்களும்
சிங்கப்பூரில் மட்டும் 22 முதல் 44 வயதுக்குட்பட்ட 11 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிறார் பாலியல் வன்கொடுமை காட்சிகளைத் தயாரித்தல், பரப்புதல் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகச் சிறார்களுடன் பாலியல் ரீதியாகத் தொடர்புகொள்ள முயன்றது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சிங்கப்பூரில் 16 பேர் உட்பட மொத்தம் 119 பேரிடம் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான மின்னணு சாதனங்கள் மற்றும் ஆபாசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மலேசியாவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், டெலிகிராம் (Telegram) மூலம் ஆபாசப் பொருட்களை விலைக்கு வாங்கிய நபர்களும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
கடுமையான தண்டனை எச்சரிக்கை
கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஆன்லைன் மெசேஜிங் தளங்கள் மூலம் சட்டவிரோதமான இக்காட்சிகளைத் தரவிறக்கம் செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு வழக்கில், வெளிநாட்டிலிருந்து சிறாரைச் சுரண்டிய நபரைச் சர்வதேசப் போலீஸாரின் உதவியுடன் சிங்கப்பூர் அதிகாரிகள் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். சிங்கப்பூர் சட்டப்படி, சிறார் பாலியல் வன்கொடுமை வீடியோக்களைத் தயாரிக்கும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய குற்றங்கள் டிஜிட்டல் தளங்கள் மற்றும் எல்லை கடந்த பணப்பரிமாற்றங்கள் மூலம் நடப்பதால், சர்வதேச ஒத்துழைப்பு மிக அவசியம் எனப் போலீஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
