அமெரிக்காவின் புகழ்பெற்ற புலிட்சர் விருது இந்த ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்கள் இந்த உயரிய விருதைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் புலிட்சர் விருது இந்த ஆண்டு இதழியல் மற்றும் படைப்புத் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை இந்திய செய்தியாளர்களான ஆனந்த் R K மற்றும் சுபர்ணா சர்மா பெற்றுள்ளனர். இவர்களுடன் இணைந்து ஜப்பானைச் சேர்ந்த பத்திரிகையாளர் நடாலி ஓபிகோ பியர்சன் அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் இணைய வழி ஏமாற்றுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “ட்ராப்ட்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட கார்ட்டூன் தொடர் மற்றும் செய்தி வடிவிலான படைப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த ஆனந்த் ஆர்.கே., கலைப்படைப்புகள் மற்றும் விளக்கப்படங்கள் மூலம் சமூக பிரச்சினைகளை வெளிப்படுத்துவதில் தனித்துவம் பெற்றவர். இந்திய கடற்படை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்காகவும் அவர் படைப்புகளை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியைச் சேர்ந்த சுபர்ணா ஷர்மா, பல முக்கிய ஊடகங்களில் பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்க செய்தியாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக நிறுவப்பட்ட புலிட்சர் விருது, உலகின் மிக உயரிய பத்திரிகை விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதழியல், இலக்கியம், இசை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்கள் உலகளாவிய அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பது இந்திய ஊடகத் துறைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பத்திரிகை துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
