சர்வதேச அளவில் நிலவும் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள் விலை உலகெங்கும் உயர்ந்துள்ளது. இதன் தாக்கத்தால் பாகிஸ்தானில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 458 ரூபாய்க்கும், டீசல் 520 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்தத் திடீர் விலையேற்றத்தால் அதிர்ச்சியடைந்த அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அரசின் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
பிரதமரின் நள்ளிரவு அறிவிப்பு
மக்களின் கொந்தளிப்பான நிலையைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று நள்ளிரவு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 80 ரூபாயைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் 378 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்த அவர், மேற்காசியப் போர் முடிவுக்கு வந்தவுடன் எரிபொருள் விலையானது பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் உறுதி அளித்தார்.
இலவசப் பேருந்துப் பயணம்
எரிபொருள் விலை குறைப்பு மட்டுமன்றி, பாகிஸ்தானின் தலைநகர் உள்ளிட்ட பஞ்சாப் மற்றும் சிந்த் மாகாணங்களில் பொதுமக்கள் ஒரு மாத காலத்திற்குப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற அதிரடிச் சலுகையையும் பிரதமர் அறிவித்துள்ளார். இருப்பினும், ரயில் பயணக் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தச் சலுகைகள் அனைத்தும் ஒரு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
