ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் ராணுவம் திங்கட்கிழமை இரவு பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 2,000 படுக்கை வசதிகள் கொண்ட அந்தப் பிரம்மாண்ட மருத்துவமனையின் பெரும் பகுதி இந்தத் தாக்குதலில் இடிந்து தரைமட்டமானதில், சுமார் 400 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார். இந்தச் செயலை மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம் என்று தலிபான் அரசு கடுமையாகச் சாடியுள்ளது.
இருப்பினும், தலிபான் அரசின் இந்தக் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்கள் நாட்டு எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் தீவிரவாதக் குழுக்களைத் தலிபான் கட்டுப்படுத்தத் தவறியதால், காபூல் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு கிடங்குகளை மட்டுமே குறிவைத்துத் துல்லியமான தாக்குதல் நடத்தியதாகப் பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் விளக்கம் அளித்துள்ளார். எந்த மருத்துவமனையும் தங்கள் இலக்காக இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மருத்துவமனை மீதான இந்தத் தாக்குதலை ஒரு கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறைச் செயல் என்று வர்ணித்துள்ள இந்தியா, ஒரு பெரும் படுகொலையை ராணுவ நடவடிக்கை எனக்கூறி பாகிஸ்தான் மறைக்க முயற்சிப்பதாகச் சாடியுள்ளது. அண்டை நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் தற்போது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
