மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. தமிழகத்தின் சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை ஜாம்பவான்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் ஒரு மாத இதழாகத் தனது பயணத்தைத் தொடங்கிய ‘நம்பிக்கை’, 24 ஆண்டுகள் ஒரு இதழ் கூடத் தடையின்றி வெளிவந்து பெரும் சாதனை படைத்தது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணை உள்ளிட்ட நாடுகளில் பரந்து விரிந்த வாசகர் வட்டத்தைக் கொண்டிருந்த இவ்விதழ், இப்பொழுது இந்தியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய ஆகிய நாடுகளில் தனது கால்தடத்தைப் பதித்து உள்ளது.
நம்பிக்கையான ஊடகம்
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட உலகளாவிய மாற்றங்களைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ‘நம்பிக்கை’ டிஜிட்டல் தளத்தில் (Online Media) கால் பதித்தது. குறுகிய காலத்திலேயே மலேசியாவின் முதன்மை இணைய ஊடகமாக உருவெடுத்துள்ள இத்தளம், தற்போது சுமார் 8 மில்லியன் வாசகர்களைத் தன்னகத்தே கொண்டு உலகளவில் முன்னணி வகிக்கிறது.
அரசியல், சமூகம், பொழுதுபோக்கு, அறிவியல், விளையாட்டு மற்றும் கலை என அனைத்துத் துறைகளிலும் உடனுக்குடன் துல்லியமான தரவுகளுடன் செய்திகளை வழங்குவதில் ‘நம்பிக்கை’ முன்னோடியாகத் திகழ்கிறது. நடுநிலை தவறாமல் தகவல்களைத் தருவதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் இத்தளத்தை விரும்பி வாசிக்கின்றனர். சென்னையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், தமிழகத்தின் கலாச்சாரப் பண்பாட்டின்படி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்றது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.
