மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தனது சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டில் கழிக்க அனுமதி கோரி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றுள்ளதாக திங்கட்கிழமை (ஏப்ரல் 27, 2026) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல பில்லியன் டாலர் ஊழல் தொடர்பான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நஜிப் ரசாக், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வீட்டுச் சிறை கோரிக்கையும் நீதிமன்ற நிராகரிப்பும்
மலேசியாவின் முன்னாள் மன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியம் 2024-ஆம் ஆண்டு நஜிப் ரசாக்கின் தண்டனையை பாதியாகக் குறைத்தது. அந்த முடிவின் போது, எஞ்சிய தண்டனைக் காலத்தை அவர் தனது இல்லத்திலேயே கழிக்க மன்னர் அனுமதி அளித்து கூடுதல் உத்தரவு பிறப்பித்ததாக நஜிப் ரசாக் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதிகாரிகள் அந்த உத்தரவைப் புறக்கணித்ததாகக் கூறி, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் ரசாக்கின் வீட்டுச் சிறை கோரிக்கையை நிராகரித்தது.
மேல்முறையீடு வாபஸ் - அடுத்தடுத்த பின்னடைவுகள்
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நஜிப் ரசாக் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த மேல்முறையீட்டு மனுவைத் தன்னிச்சையாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இது தொடர்பாக மீண்டும் புதிய மனுவைத் தாக்கல் செய்யும் உரிமை தங்களுக்குத் தேவையில்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். ஏப்ரல் 3 மற்றும் 6-ஆம் தேதியிட்ட அந்தக் கடிதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மேல்முறையீடு வாபஸ் பெறப்பட்டதை உறுதி செய்தது.
1MDB ஊழல் பின்னணி
2009-ஆம் ஆண்டு நஜிப் ரசாக் பிரதமராக இருந்தபோது 1MDB அரசு நிதியம் தொடங்கப்பட்டது. இதிலிருந்து சுமார் 4.5 பில்லியன் டாலர் திருடப்பட்டதாக மலேசியா மற்றும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இதில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட கணக்குகளுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 6 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அவருக்கு, கடந்த டிசம்பரில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி வழக்கில் மேலும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2.8 பில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
