மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மகனான இவர், ஈரானின் 88 மூத்த மதகுருமார்கள் அடங்கிய 'நிபுணர்கள் குழுவின்' பெரும்பான்மை ஆதரவுடன் இந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரானின் பாதுகாப்புப் படைகள் மற்றும் நாட்டின் முக்கிய வணிகக் கட்டமைப்புகளில் ஏற்கனவே பெரும் செல்வாக்கு பெற்றிருந்த மொஜ்தபா, தற்போது ஈரானின் மூன்றாவது உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் ஈரானில் கடும்போக்காளர்களின் பிடி மேலும் வலுவடைந்துள்ளதோடு, நாட்டின் அனைத்து அரசு விவகாரங்களிலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இவருக்குக் கிடைத்துள்ளது.
ஈரானின் இந்த அதிரடித் தேர்வுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈரானின் புதிய தலைமைக்கு அமெரிக்காவின் அங்கீகாரம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த அதிபர் டிரம்ப், அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்தத் தலைமை நீண்ட காலம் நீடிக்காது என எச்சரித்துள்ளார். அதேபோல், புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களைக் குறிவைப்போம் என இஸ்ரேல் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது. ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், மொஜ்தபாவின் இந்த நியமனம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
