அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து ஈரானில் நடத்திய அதிரடித் தாக்குதலில், அந்நாட்டின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் காமேனியின் மனைவி, மகள், பேத்தி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து சுமார் 40-க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஈரானின் தற்காலிக உச்ச தலைவராக அலிரேசா அராஃபி பொறுப்பேற்று வழிநடத்தி வந்த நிலையில், நிரந்தரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை 88 ஷியா மதகுருக்களைக் கொண்ட நிபுணர்கள் குழு தீவிரப்படுத்தியது.
நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மறைந்த அலி காமேனியின் இரண்டாவது மகனான 56 வயது மோஜ்தபா ஹொசைனி காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 27 ஆண்டுகளாகத் திரைமறைவில் இருந்து அரசியல் நகர்வுகளைக் கவனித்து வந்த மோஜ்தபா, இப்போது ஈரானின் முழு அதிகாரத்தையும் தன்வசப்படுத்தியுள்ளார். வாரிசு அரசியலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த ஈரான் அரசு, தற்போது தந்தைக்குப் பின் மகனையே தலைவராகத் தேர்ந்தெடுத்திருப்பது அந்நாட்டின் கொள்கை முடிவுகளில் ஒரு முரணான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இஸ்ரேலின் நேரடி மிரட்டல்
ஈரானின் இந்த புதிய தலைமை மாற்றத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலை அழிக்க நினைக்கும் அல்லது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் நோக்கில் செயல்படும் எந்தவொரு ஈரானியத் தலைவரும் இஸ்ரேலின் இலக்காகவே கருதப்படுவார் என்று எச்சரித்துள்ளார். புதிய தலைவரின் பெயர் என்னவாக இருந்தாலும் அல்லது அவர் எங்கு மறைந்திருந்தாலும், அவரைப் பிடிப்பது அல்லது அழிப்பதே இஸ்ரேலின் நோக்கம் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
